×

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.12.50 லட்சம் உற்பத்தி முதலீட்டு மானியம்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் பகுதி 3ல் இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் பெரியநத்தம், போந்தவாக்கம், எளாவூர் மற்றும் ஏடூர் ஆகிய கிராமங்களைச் சார்ந்த தலா 900 விவசாயிகள் உறுப்பினர்களும் பங்குதாரர்களாகவும் உள்ளனர்.

இந்நிறுவனம் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் மணிலா, எள், நெல் ஆகிய விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி மொத்த விற்பனையில் ஈடுபடவும் திட்டம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே இத்திட்டத்தில் நிறுவன செலவுகளுக்காக அரசு ரூ.5 இலட்சம் துவக்க மானியமாக வழங்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் பொது சேவை மையம் அமைப்பதற்கு உற்பத்தி முதலீடு மானியமாக ரூ.25 லட்சத்தில் முதல் தவணையாக 50 சதவீதம் டிஎன்ஐஏஎம்பி கும்மிடிபூண்டி உழவர் உற்பத்தியாளர் நிறுனத்திற்கு ரூ.12.5 லட்சம் முதல் தவணையாக நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நிறுவன இயக்குநர்களிடம் காசோலையாக வழங்கினார். இத்தொகையினை நல்ல முறையில் பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய தனது வாழ்த்துக்களை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபிநேசர், திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஈ.ராஜேஸ்வரி, பொன்னேரி, வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) க.அமுதா, தேசிய ஆதார நிறுவன நிர்வாகிகள் மனோகரன், அருண்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.12.50 லட்சம் உற்பத்தி முதலீட்டு மானியம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tamil Nadu ,Kummidipoondi district ,Agriculture Marketing and Agribusiness Department ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்