*கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மூன்று நாட்கள் சிலைகளை கரைக்கவும், 10 இடங்களில் ஊர்வலங்கள் நடத்தவும் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைத்தல், ஊர்வலங்களுக்கு காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம், சப் கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம், ஏடிஎஸ்பி ராஜேந்திரன், தாசில்தார்கள், டிஎஸ்பிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன், சிவசேனா, பா.ஜ கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கருத்துகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் தர் பேசியதாவது:விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் செப்டம்பர் 22, 23, 24 தேதிகளில் கரைக்கப்படுகிறது. ஊர்வலம், சிலைகள் கரைப்பதற்கு 10 இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
*விநாயகர் சிலை அமைக்க அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று காவல் துறையின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
*ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
*எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
*சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
*சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும், விதிமீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து கரைக்கப்படும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பட்டாசு வெடிக்க தடை
கலெக்டர் மேலும் கூறுகையில், நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும். ஊர்வலம், சிலையை கரைக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.
சிலை கரைக்கப்படும் 10 இடங்கள்
*கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்தவிளை கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, பள்ளிகொண்டான் அணைக்கட்டு, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காப்பட்டணம் கடற்கரை, திற்பரப்பு ஆறு, தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*சிலையின் பீடம் மற்றும் அடித்தளத்துடன் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படுகின்ற இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலைவர்களின் விளம்பர தட்டிபோடு கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
*சிலை வைக்கப்படுகின்ற இடத்தில் 24 மணி நேரமும் தொடர்புடைய அமைப்பை சேர்ந்த 2 தன்னார்வல நபர்கள் பாதுகாப்புக்கு இருக்க அந்தந்த அமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய மின் விளக்குகள், ஜெனரேட்டர் வசதி செய்யப்பட வேண்டும்.
*விநாயகர் சிலை கரைப்பதற்கு ஊர்வலம் சிலைகள் கரைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு நண்பகல் 12 மணி நேரத்திற்கு முன்பு கொண்டு செல்லப்பட வேண்டும். ஊர்வலம் காவல்துறை வரையறுத்து கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். மாலை 6 மணிக்குள் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட வேண்டும்.
*விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு சமூக ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்குடன் வருவாய்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும். சிலை வைக்கும் இடங்கள் குறித்த பட்டியலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் பத்மநாபபுரம் சார் ஆட்சியர், நாகர்கோவில் ஆர்டிஒவிடம் விழா அமைப்பினர் ஒப்படைக்க வேண்டும்.
*களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
The post 10 இடங்களில் ஊர்வலம் குமரியில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் கரைப்பு appeared first on Dinakaran.