×

ஒரு மாதமாக கம்ப்யூட்டர் இயங்காததால் ஓபி சீட்டு கையால் எழுதி தருவதால் சிக்கல்: ஆன்லைனின் வழங்க நோயாளிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், கம்ப்யூட்டர்கள் இயங்காததால், கடந்த ஒரு மாதமாக உள் மற்றும் புற நோயாளிகளுக்கு ஓபி சீட்டு எனப்படும் மருத்துவம அனுமதி சீட்டு கையால் எழுதி தரப்படுவதால் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் ஓபி சீட்டு வழங்க வேண்டும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த உள் மற்றும் புற நோயாளிகள் என 2000க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில், எழுதப் படிக்க தெரியாத பல்வேறு கிராம மக்களும், மொழி தெரியாத பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வட இந்தியர்களும், அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்னதாக உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் ஓபி சீட்டு வாங்க வேண்டும். எனவே, மருத்துவமனையில் உள்ள ஓபி சீட்டு வழங்கும் பிரிவு 24 மணி நேரமும் செயல்படும். இங்கு பதிவு செய்வதற்காக 3 கம்ப்யூட்டர்கள் உள்ளது. சிகிச்சை பெற வரும் நோயாளியின் பெயர், வயது, செல்பேசி எண் ஆகியவற்றை தெரிவித்தால் இணையதளம் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்து பிரிண்ட் எடுத்து உடனுக்குடன் அனுமதி சீட்டு வழங்கப்படும்.

இந்த பிரிவில் உள்ள 3 கம்ப்யூட்டர்களும் கடந்த ஒரு மாத காலமாக இணையதள பிரச்னை உள்ளது எனக்கூறி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால், மருத்துவமனைக்கு வருகின்ற உள் மற்றும் புற நோயாளிகள் ஓபி சீட்டு வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருந்து ஓபி சீட் வாங்கும் நிலை உள்ளது. அதேபோல் ஆன்லைனில் தரப்படும் ஓபி சீட்டில் ஐபி எண் இருக்கும். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களோ, வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களோ தொடர் சிகிச்சை பெற வேண்டுமெனில், ஆன்லைன் ஓபி சீட்டை காண்பித்தால் அதனுடைய ஐபி நம்பர் வழியாக நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை எடுத்து அதற்கு ஏற்றார் போல் தொடர் சிகிச்சை பெற முடியும்.

ஆனால், கையால் எழுதி தரப்படும் ஓபி சீட்டுகளால் அப்படிப்பட்ட தொடர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளொன்றுக்கு 2000 வரை உள் மட்டும் புற நோயாளிகள் என கணக்கிட்டால் மாதம் குறைந்தபட்சம் 40,000 முதல் 60,000 ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகளின் தகவல்கள் எதுவும் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாததால் மருந்து மாத்திரைகள் வழங்குவதிலும், பெறுவதிலும், அரசாங்கத்துக்கு கணக்கு காண்பிக்க முடியாத சிக்கல் உள்ளது எனவும், இதனால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக உள் மற்றும் புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

The post ஒரு மாதமாக கம்ப்யூட்டர் இயங்காததால் ஓபி சீட்டு கையால் எழுதி தருவதால் சிக்கல்: ஆன்லைனின் வழங்க நோயாளிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Government General Hospital ,Dinakaran ,
× RELATED குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள்...