×

பிரச்னையின் போது மவுனமாக இருப்பவர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு

புதுடெல்லி: நாட்டில் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் பிரதமர் மோடி ஒன்றும் பேசாமல் மவுனமாக இருப்பார் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லி சட்டபேரவையில் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில்,‘‘ பிரதமர் நாட்டின் தலைவர் ஆவார். மணிப்பூரில் இளம் பெண்கள் பாதிக்கப்பட்டபோது, மோடி திரும்பி கொண்டார். அவர் தன்னுடைய அறையிலேயே உட்கார்ந்து கொண்டார். அவரது அமைதிக்கான காரணம் குறித்து நாட்டு மக்கள் அனைவரும் கேள்வி கேட்டனர். இது மாதிரி அவர் இருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 9 ஆண்டுகளில் இது போல் அவர் பல முறை அமைதி காத்துள்ளார். மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ்பூஷன் சிங் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார் என குற்றசாட்டு எழுந்தது.

பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டங்கள் நடத்தினர். அப்போதும், பிரதமர் அமைதியாக இருந்தார். ஆனால், சர்வதேச போட்டிகளில் மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை வென்று இந்தியா திரும்பிய போது அவர்களுடன் புகைப்படம் எடுக்க அவர் தவறவில்லை. வீராங்கனைகள் எனது மகள் என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என அவர் உறுதியளித்திருக்கலாம். அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்ற பின்னர்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரத்திலும் குறைந்தபட்சம் அமைதி ஏற்படுவதற்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம்’’ என்றார்.

The post பிரச்னையின் போது மவுனமாக இருப்பவர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Arvind Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Kejriwal ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது...