×

தனியார் சிமெண்ட் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு: கலெக்டரிடம் புகார் மனு

திருவள்ளூர்: தனியார் சிமெண்ட் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். சென்னை, வானகரம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கலவை கான்கிரீட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலையில் தேங்கி நிற்பதால் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. தண்ணீரின் சுவை மாறி உள்ளது.

மேலும் இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தும் எம் சாண்ட், சிமெண்ட், கெமிக்கல்ஸ், டஸ்ட் ஆகியவற்றை சிமென்ட்டுடன் கலந்து இயந்திரத்தை இயக்கும்போது அதிலிருந்து வரும் சிமெண்ட் பவுடர் மற்றும் ஜல்லி துகள்கள் காற்றில் பறந்து அருகாமையில் உள்ள வீடுகளில் சிதறுகிறது. இந்த மாசுவால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் பொருளாளர் சத்தியமூர்த்தி, துணை செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

The post தனியார் சிமெண்ட் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு: கலெக்டரிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு...