×

தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து ஏரியில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட், எஸ்எஸ்எம் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இதில், 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரிக்கு செல்லும் கால்வாயில் விடப்பட்டு, அந்த கழிவுநீர் அருகிலுள்ள புத்தேரி ஏரியில் சென்று கலக்கிறது. இதனால், ஏரிநீர் மாசடைந்து, அதை நம்பி உள்ள சுற்றுப்பகுதி கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீர் வெளியேறும் பகுதியை மண்ணை கொண்டு அடைத்தனர்.

இதையடுத்து, தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அடைக்கப்பட்ட மண்ணை மீண்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர், ஒரு தரப்பினர் ஏரியில் கழிவுநீரை வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கன்காரணை போலீசார், இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மட்டுமே, கலைந்து செல்வதாக தெரிவித்து, பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்எஸ்எம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருகிலுள்ள புத்தேரியில் கலக்கிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, ஆலப்பாக்கம் மற்றும் புத்தூர் கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, பலமுறை தனியா அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் என அனைவருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அடுக்குமாடிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 3 அரசு பள்ளிகளிலும் நிலத்தடி நீர்தான் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும்போது பள்ளி மாணவர்களும் அந்த தண்ணீரை குடிக்கும் நிலை உள்ளது. கழிவுநீர் கலந்த தண்ணீரை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குடித்து வருவதால் நோய்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்,’’ என்றனர்.

கோட்டாட்சியர் எச்சரிக்கை
பொதுமக்கள் போராட்டம் குறித்து அறிந்த தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் விடுவது சட்டப்படி குற்றம். அதனால் அவர்களாகவே கழிவுநீரை சுத்திகரித்து, வெளியேற்ற வேண்டும். அல்லது தொட்டிகளில் சேகரித்து, லாரிகள் மூலம் வெளியேற்ற வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பகுதிகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும், என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து ஏரியில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tambaram, SSM ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு