×
Saravana Stores

ஆன்லைனுக்கு டாட்டா; அச்சு ஊடகத்துக்கு மாறும் விளம்பரதாரர்கள்: ஆய்வில் தகவல்


புதுடெல்லி: ஆன்லைன் ஊடகங்களுக்கு பதிலாக மீண்டும் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளன. டாம் ஊடக ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இதுபற்றி கூறியிருப்பதாவது: 2024 ஆண்டில் முதல் மாதத்தில் அச்சு ஊடகத்தில் வெளியான விளம்பரங்களின் அளவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 5 சதவீதம் அதிகம். அச்சு ஊடகங்களில் வெளியான விளம்பரங்களில் 19 சதவீதம் கல்வித் துறை சார்ந்தது. அதற்கு அடுத்தபடியாக சேவை துறை விளம்பரங்கள் 15 சதவீதம். கார்களுக்கான விளம்பரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல் செல்போன் விளம்பரங்களும் அதிகம் வெளிவந்துள்ளன. மொத்தம் 1,05,000 பிராண்டுகள் தங்கள் பொருட்களை, சேவைகளை விளம்பரப்படுத்தி உள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விளம்பரத் துறை வல்லுநர்கள் கூறுகையில், ‘ஆன்லைன் சேனல்கள் புற்றீசல் போல பெருகி விட்டன. ஒவ்வொரு இணைய சேனலும் தங்களை பின் தொடர்பவர்கள் இத்தனை லட்சம் பேர் என்றும், வீடியோக்களை பார்ப்பவர்கள், லைக் போடுபவர்கள் பல லட்சம் என்று கூறி விளம்பரங்களை வாங்கிவிடுவார்கள். ஆனால் அந்த விளம்பரங்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விளம்பரதாரர்கள் விசாரித்ததில், பல சேனல்களுக்கு உள்ள பாலோயர்களில் பெரும்பாலானவர்கள் போலி என்பது தெரியவந்தது. மேலும், ஒரே செய்தியை நூற்றுக்கணக்கான யூடியூப் சேனல்கள் வெளியிடுவதால், முதலில் ஏதாவது ஒரு சேனலில் செய்தியை பார்த்து விட்டால் மற்ற யூடியூப் சேனல்களில் உள்ள அதே செய்தியை மக்கள் யாருமே பார்ப்பதில்லை.

அதே சமயம் தினசரி நாளிதழுக்கென பெரிய அளவில் வாசகர்கள் இருப்பார்கள். ஆனால், யூடியூப் சேனல்களை பொறுத்தவரை அப்படி குறிப்பிட்ட சேனலை மட்டும் பார்ப்பவர்கள் யாரும் கிடையாது. இதனால், பெரிய சேனல் என்று விளம்பரம் கொடுத்தாலும் எந்த பலனும் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், 10 விநாடி, 20 விநாடி ஓடும் ஆன்லைன் விளம்பரத்தைவிட அச்சு ஊடகத்தில் நிறைய தகவல்களை இடம் பெறச் செய்யலாம். விளம்பர பொருளின் மதிப்பு பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் தெளிவாக மக்கள் புரியும்படி விளக்கலாம். இத்தகைய காரணங்களால் ஆன்லைன் விளம்பரங்களுக்கு பதிலாக அச்சு ஊடக விளம்பரத்துக்கு விளம்பரதாரர்கள் மாறிவருகின்றனர்’ என்றனர்.

The post ஆன்லைனுக்கு டாட்டா; அச்சு ஊடகத்துக்கு மாறும் விளம்பரதாரர்கள்: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tata ,NEW DELHI ,Tom media ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு...