×

பிரதமர் பதில் எங்கே?

நாடாளுமன்ற வரலாற்றில் அவை விவாதத்திற்கு வராமல் புறக்கணிக்கும் ஒரே பிரதமர் என்ற பெயரை மோடி பெற்று இருக்கிறார். இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களும் நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, அதை அவையில் இருந்து கேட்டு, ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதில் வழங்குவது வழக்கம். இதுதான் நாடாளுமன்ற நடைமுறை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இன்றுவரை எதிர்க்கட்சிகளின் கேள்விகளை சந்திக்கவும் இல்லை, பதில் அளிக்கவும் இல்லை. விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், ரபேல் ஊழல் குற்றச்சாட்டு, புல்வாமா தாக்குதல் உள்பட பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்த போதும், அத்தனை விவாதங்களிலும் கலந்து கொள்ளாமல், கேள்விக்கணைகளை எதிர்கொள்ளாமல், அவை நடவடிக்கைகளை தவிர்க்கும் ஒருவராகத்தான் பிரதமர் மோடி இன்றுவரை இருந்து வருகிறார். அப்படி இருக்கும் போது மணிப்பூர் பிரச்னைக்கு மட்டும் பதில் சொல்லி விடுவாரா என்ன?.

மணிப்பூர் பிரச்னை மே 3ம் தேதி தொடங்கியது. இதுபற்றி பலமுறை எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும் பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. முதலில் கர்நாடக தேர்தல் அவரை அழைத்தது. அதன்பின் அமெரிக்க பயணம், அதை தொடர்ந்து பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட் பயணம் செய்தார் மோடி. ஆனால் இன்றுவரை அவர் இந்தியாவில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏன் பெண்கள் நிர்வாண ஊர்வலம் வீடியோ வெளியாகும் வரை, மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வீடியோ வெளியானதும், நாடாளுமன்றத்தில் பதில் அளிக்காமல் 35 வினாடிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதில் அளித்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும், பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டு நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் கோஷம் எழுப்பி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘நான் பதில் அளிக்கிறேன்’ என்கிறார். ஆனால் நாட்டு மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி எம்பிக்களும் பிரதமர் மோடியின் அறிக்கையைத்தான் கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பிரதமர் மோடியின் பதில் எங்கே என்பதுதான் அவர்களது கேள்வி.

ஆனால், பிரதமர் மோடி பதில் தர மறுப்பது மட்டுமல்ல, அவைக்கு வரவே மறுக்கிறார். ஆசிரியரின் கேள்விக்கு பயந்து பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் விடுப்பு எடுக்கும் மாணவனைப்போல் நாடாளுமன்ற அவைக்கு செல்ல மறுக்கிறார் பிரதமர் மோடி. மணிப்பூரில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது, எப்போது அமைதி திரும்பும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி. இந்த கேள்விகளை சந்திக்க பிரதமர் மோடி தயாராக இல்லை. பிரதமராக பதவி ஏற்று 9 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை பத்திரிகையாளர்களின் சந்திப்பை நடத்தாத ஒரே பிரதமரும் மோடி தான்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கு அதிபர் பைடனுடன் இணைந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது கூட இரண்டே கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு சென்றுவிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற தெரிந்த மோடிக்கு, அவரை பிரதமராக தேர்ந்து எடுத்த எம்பிக்கள் நிறைந்து இருக்கும் இந்திய நாடாளுமன்றத்தில் பேசவும், கேள்விகளுக்கு பதில் சொல்லவும் என்ன தயக்கம்? இதுதான் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வி. பதில் எங்கே பிரதமர் மோடி அவர்களே?

The post பிரதமர் பதில் எங்கே? appeared first on Dinakaran.

Tags : Modi ,Prime ,Dinakaran ,
× RELATED அரசு முறைப் பயணமாக ஜூலை 8-ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி