×

கோவையில் பிரதமர் மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்.. பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!

கோவை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் திங்கட்கிழமை மாலை பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஸ்ரீ சாய்பாபா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சீருடையில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் ஆணைய விதிகள் மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்ததற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் , குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். பள்ளியில் நேரடியாக சென்று விசாரணை நடத்திய பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இது குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார்பாடியிடம் வழங்கினர்.

மேலும், பள்ளியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், இது தொடர்பாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தின் மீது சிறார் சட்டப்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

The post கோவையில் பிரதமர் மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்.. பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Coimbatore ,Election Commission ,BJP ,Lok Sabha elections ,Tamil Nadu ,
× RELATED அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து