×

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை: கலெக்டர், எஸ்.பி.க்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை

சென்னை: கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்து கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் தமிழகத்தின் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் குற்றம் சாட்டுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் பல நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதேநேரத்தில் உத்திரகாண்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 2 நாட்களுக்கு பிறகு பால் கூட்டுறவு சங்க நிர்வாகி மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகளிடம் என்சிசி பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக கூறி நாம் தமிழர் நிர்வாகி பாலியல் துண்புறுத்தல் செய்துள்ளார். இந்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பி ஓடும்போது கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். கால் உடைந்தது. இந்தநிலையில், அவர் பல நாட்களுக்கு முன்னர் எலி பேஸ்ட் தின்றதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர் தற்கொலை செய்யப்போவதாக எனக்கே கடிதம் அனுப்பியிருந்தார் என்று சீமான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்தநிலையில்தான் அந்த நிர்வாகி மீது மேலும் சில மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் பள்ளியில் என்சிசி வகுப்புகள் நடத்த அனுமதி பெறாமல், நடத்தப்பட்டது தெரியவந்தது. இதுபோன்ற தொடர் சம்பவம் நாடு முழுவதும் எழுந்த நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்து கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் தமிழகத்தின் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அமலாக்கத்துறை ஏடிஜிபி அமல்ராஜ், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமஷனர் ராதிகா, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஐஜி நஜ்மல்ஹோடா, எஸ்பி உமையாள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது, நடந்தால் அதன் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது, புகார் வந்தவுடன் அலட்சியம் காட்டாமல் உரிய முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது, குற்றச் சம்பவத்தில் ஆவணங்களை அளிப்பதற்கு முன்னர் துரிதமாக நடவடிக்கை எடுப்பது, பாகுபாடு காட்டாமல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதேநேரத்தில் பள்ளியில் சிறப்பு கமிட்டிகள் அமைப்பது, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது பள்ளிகள் தொடங்கி நடந்து வருவதால், மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதற்கு முன்ேப தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை: கலெக்டர், எஸ்.பி.க்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Collector, S.B. ,Chennai ,Tamil Nadu ,Chief Secretary ,Muruganandam ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...