×

வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் வினியோகம் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலம். இந்த காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும்.

மேலும் பல காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி அவை வலுப்பெற்று புயலாகவும் மாறும். இந்த நேரத்தில் மின் பகிர்மான சாதனங்களில் பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகளை தவிர்க்கவும், மின் பகிர்மான கட்டுமானங்களை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து 12 மண்டல தலைமை பொறியாளர்கள், 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பராமரிப்பு பணிகளின் நிலவரம், மின் கட்டணம் வாயிலாக வருவாயை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையின்போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்க மின் சாதனங்கள் முழுவதுமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பணியாளர்களை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் உள்ள மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலாகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு, மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிப்பதுடன், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவதை தடுக்க தீவிர ஆய்வில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் வினியோகம் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Chennai ,Tamil Nadu ,
× RELATED உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை...