×

தர்மத்தை நிலைநாட்டிய பிரகலாதன்

வாயை மூடிக் கொண்டு இருப்பது, பெரிய கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது. அதேபோல, பேசுவது என்பதும் மிகப் பெரிய கலை. அதுவும் சுலபத்தில் வந்துவிடாது.குழப்பம் வருகிறது அல்லவா? வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில், மௌனமாக இருந்துதான் ஆக வேண்டும். ஆனால், நமக்குள் ஏதோ ஒன்று இருந்துகொண்டு தூண்ட, பேசக் கூடாத நேரத்தில் பேசி, பிரச்னைகளை வரவழைத்துக் கொள்கிறோம்.

பேச வேண்டிய நேரத்தில் பேசாவிட்டால், அது பலவிதமான பிரச்னைகளை உண்டாக்கிவிடும். ஆனால், அந்த நேரத்தில், ஏதோ ஒன்று நம்மைத் தடுக்க, பேசாமல் வாய் மூடி மௌனியாகிவிடுகின்றோம். இதனால் விளையக்கூடிய பாவம் என்ன? பிரகலாதன் மூலம் நீதி சொல்கிறார் வியாசர்.
பிரகலாதன் மகன் விரோசனன்; அங்கீரஸ ரிஷியின் மகன் சுதன்வா. இவர்கள் இருவருக்கும் கேசினி என்ற பெண்ணை முன்னிட்டு, ‘‘தங்களில் பெரியவர்யார்?’’ என்ற வாதம் வந்தது. ஒவ்வொருவரும், ‘‘நான்தான் பெரியவன்’’ என்று சொல்ல, கடைசியில் இருவருமாக ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்.

‘‘பிரகலாதனிடம் போய்க் கேட்கலாம். நம் இருவரில் யார் பெரியவன் என்று பிரகலாதன் சொல்லட்டும். இதில் தோற்றவன், வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற்றவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்’’ என்று முடிவுசெய்து, பிரகலாதனிடம் போய்க் கேட்டார்கள்.‘‘எங்கள் இருவரில் யார் பெரியவன்? நீங்கள் சொல்லுங்கள்!’’ எனக் கேட்டார்கள். சுதன்வா, ‘‘பொய் சொன்னாலும் சரி! அல்லது ஒன்றுமே பதில் சொல்லாமல் இருந்தாலும் சரி! இந்திரனின் வஜ்ஜிராயுதத்தால், சுக்குநூறாக ஆக்கப்படுவீர்கள்’’ என்றார். அதைக் கேட்ட பிரகலாதன், அவர்களையும் அழைத்துக் கொண்டு கச்யபரிடம் போய்க் கேட்டார்; ‘‘சுவாமி! இந்தத் தர்ம சங்கடத்தைக் கேளுங்கள்! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாதவன், கேட்ட கேள்விக்குத் தெரிந்திருந்தும் தவறாகப் பதில் சொல்பவன் ஆகியோர், அடையும் நிலை என்ன?’’ எனக் கேட்டார்.

கச்யபர் பதில் சொல்லத் தொடங்கினார்; ‘‘விருப்பு, வெறுப்பு, பயம் ஆகியவைகளின் காரணமாகப் பதில் சொல்லாமல் இருப்பவன், ஆயிரம் வருண பாசங்களைத் தன்மேல் மாட்டிக்கொள்கிறான்.‘‘நேரே பார்த்தவன், தான் பார்த்ததைச் சரியாகச் சொல்லாமல், அதைப்பற்றிச் சாதக பாதகமாகப் பேசும் இருவர் பேச்சையும் கேட்டுக்கொண்டு திரிந்தால், அவன் ஆயிரம் வருடங்கள் வருண பாசங்களைத் தன்மேல் மாட்டிக்கொண்டவனாக ஆகிறான். இவனுக்கு ஒரு வருடம் ஆனதும், மேலும் ஒரு பாசம் மேலே மாட்டப்படும். ஆகையால் தெரிந்தவன் சத்தியம் சொல்ல வேண்டும். சத்தியம்தான் முக்கியமானது.

‘‘எந்தச் சபையில் தர்மம் தடுக்கப்பட்டு அதர்மம் மேலோங்குகிறதோ, அந்தச் சபையில் உள்ளவர்களின் மனது புண்படும்;’’ அதை நீக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அப்பாவத்தில் பாதிப்பங்கு அவையில் தலைமை வகிப்பவரை அடையும். பாவத்தைச் செய்தவனுக்குக் கால் பங்கு பாவம் சேரும். கால் பங்கு பாவம் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்த சபையோரைச் சேரும். ‘‘பாவம் செய்தவனைக் கண்டித்தால், தலைமை வகிப்பவரும் சபையோரும் பாவத்தில் இருந்து விடுபடுவார்கள். பாவம், செய்தவனை மட்டுமே சேரும்.

‘‘தர்மத்தைக் கேட்பவர்களுக்குத் தவறாகப் பதில் சொல்பவர்கள், தங்கள் முன் ஏழு தலைமுறைகள், அவர்கள் செய்த யாகப் பலன்கள், தான – தர்மங்கள் ஆகியவற்றை அழிக்கிறார்கள்.’’‘‘அது மட்டுமல்ல! பொருளைப் பறி கொடுத்தவன், மகனை இழந்தவன், கடன்காரன், செயல் நிறைவேறாதவன், கணவன் இல்லாப் பெண், அரசாங்கத்தால் துன்புறுத்தப் பட்டவன், குழந்தை இல்லாதவள், புலியால் துரத்தப்பட்டவன், சக்களத்தி உள்ளவள், சாட்சிகளால் கெடுக்கப்பட்டவன் ஆகியோரின் துயரங்களை எல்லாம், தவறாகப்பதில் சொல்பவர்கள் அடைகிறார்கள் என்று, தேவ சிரேஷ்டர்கள் சொல்கிறார்கள். அசத்தியம் சொல்பவன் மேற்சொன்ன அத்தனை துயரங்களையும் அடைகிறான்’’ என்றெல்லாம் விரிவாகச் சொல்லி முடித்தார் காச்யபர்.

(துயரங்களையெல்லாம் இங்கே வியாசர் பட்டியலிட்டு இருக்கிறார் என்பதை உணர வேண்டும்)அதைக் கேட்ட பிரகலாதன், தன் பிள்ளை விரோசனனைப் பார்த்து, ‘‘விரோசனா! உன்னைவிட, சுதன்வா பெரியவன். உன் தந்தையான என்னைவிட, சுதன்வாவின் தந்தையான அங்கீரஸர் பெரியவர். உன் தாயைவிட, சுதன்வாவின் தாயார் உயர்ந்தவள். ஆகையால் நீ இந்த சுதன்வாவிற்குத் தான் உரியவன். சுதன்வாவிடம் நீ அடிமைப்பட்டு இருக்க வேண்டும்’’ என்றார். இங்கே பிரகலாதனின் தூய்மையும் நேர்மையும் வெளிப்படுகின்றன.

பிரகலாதனின் வார்த்தைகளைக் கேட்ட சுதன்வாவின் மனம் கனிந்தது;’ ‘‘மன்னா! உன் பிள்ளையும் நானும், எங்களில் உயர்ந்தவர் யார் எனக்கேட்டால், அதற்கான பதிலைச் சரியாகச் சொன்னாய். புத்திர பாசத்தை்கூட விட்டுவிட்டு, நீ தர்மப்படி நடந்து கொண்டாய். உன் பிள்ளை விரோசனன் எனக்கு அடிமையில்லை. இந்த விரோசனன் நூறு வருட காலங்கள் நன்றாக இருக்கட்டும்’’ என வாழ்த்தி விட்டுச் சென்றார் சுதன்வா. தர்மம் தவறாதவர்களின் பரம்பரை நன்றாக வாழும் என்பதை விளக்க, வியாசர் சொன்ன கதை இது.

V.R.சுந்தரி

The post தர்மத்தை நிலைநாட்டிய பிரகலாதன் appeared first on Dinakaran.

Tags : Pragladhan ,
× RELATED குமரனும் கோசலை குமரனும்