×

பூந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி பான் மசாலா, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 10 கடைகளுக்கு அபராதம்

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அகாரிகள் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள், உணவகங்கள், மளிகைக் கடை குடோன்கள் என 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 10 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 10 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவது சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5,000, மூன்றாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது, பூந்தமல்லி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வேலவன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பாதுகாப்பிற்காக பூந்தமல்லி போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

The post பூந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி பான் மசாலா, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 10 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli food safety department ,Poontamalli ,Tiruvallur district ,Tiruvallur ,Food safety department ,Dinakaran ,
× RELATED கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்...