×

பொன்மலை பணிமனையில் மின் மோட்டார்கள் கடத்தல்; திருச்சி ரயில்வே இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, போலீஸ்காரர் சஸ்பெண்ட்: ஐஜி அதிரடி நடவடிக்கை

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்த மின் மோட்டார்கள் கடத்தலில் அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, போலீஸ்காரர் ஆகியோரை நேற்று ஐஜி ஈஸ்வரராவ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் தற்போது 5,000 வெளிமாநில மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர்.

கடந்த வாரம் பணிமனைக்குள் இருந்து ஸ்க்ரேப் என்ற பழைய இரும்பு பொருட்களை ஏலத்தில் எடுக்க கோவையை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் பொன்மலை பணிமனைக்கு லாரியை அனுப்பி வைத்துள்ளார். அதில், இரும்பு பொருட்களை ஒப்பந்த பணியாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு பின்னர் பணிமனையில் இருந்த இன்ஜினுக்கான மின் மோட்டாரை காணவில்லை. சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், கோவை பதிவு எண் கொண்ட லாரியில் ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கிரண் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவை சென்று லாரியை பறிமுதல் செய்தனர். அதில் 3.5 டன் எடையுள்ள 2 மின் மோட்டார்கள் இருந்தது. பணிமனையில் ஒரு மோட்டார் மட்டுமே காணாமல் போனதாக தேடிய நிலையில், இரண்டு மின் மோட்டார்கள் இருந்ததை கண்டு தனிப்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய லாரி டிரைவர்களை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கோவையை சேர்ந்த கோபால்(30), மணிகண்டன்(29) என்பதும், ரயில்வே பணிமனை தூய்மை பணி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்ததும், குப்பைகளை அள்ளிக்கொண்டு வெளியே கொட்ட வரும் போது மின்மோட்டார்களை லாரியில் வைத்து மேலே குப்பைகளை கொட்டி எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.மின் மோட்டார்களை கடத்தி சென்ற சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் கிரண், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் ஐஜி ஈஸ்வரராவ் நேற்று சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post பொன்மலை பணிமனையில் மின் மோட்டார்கள் கடத்தல்; திருச்சி ரயில்வே இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, போலீஸ்காரர் சஸ்பெண்ட்: ஐஜி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : PonMalai ,Trichy Railway ,SI ,IG Action ,Trichy ,Trichy Ponmalai Railway Workshop ,PonMalai Workshop ,Trichy Railway Inspector ,IG Action Action ,Dinakaran ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம்...