×

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சாதி, மதங்களை கடந்து அனைவராலும், உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலங்களிலும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக அரசு அலுவலகங்கள் முழுவதும் தோரணங்கள் கட்டி, வண்ண கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாரம்பரிய உடையான பட்டு சேலை அணிந்தும், ஆண்கள் பட்டு வேட்டி அணிந்தும் வந்திருந்தனர். தொடர்ந்து மண்பானையில் மண் மணம் மாறாமல் பொங்கலிட்டனர்.

பானையில் பொங்கல் பொங்கிய போது, அங்கு கூடியிருந்தவர்கள் ‘பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்’ என்று குரல் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் கலெக்டர் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைக்கப்பட்டது.

அப்போது தாளத்துக்கு ஏற்ப அதிகாரி, ஊழியர் என்று அந்தஸ்து பாராமல் அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அனைத்து தரப்பினரும் ஆட்டம், பாட்டம் என்று அரசு அலுவலகமே விழாக்கோலம் பூண்டது. தொடர்ந்து அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிட்டனர். கலெக்டர் முதல் அனைத்து ஊழியர்கள் வரை பொங்கல் பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பெண் கலெக்டர்களின் அசத்தல் நடனம் பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Tamil Nadu ,CHENNAI ,Pongal festival ,
× RELATED முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில்...