×
Saravana Stores

நீலகிரி மாவட்டத்தில் 1.85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ரூ.1000 ரொக்கம் மற்றும் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு 1.85 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: 2024 தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களை தவிர்த்து மற்ற அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்புடன், ரொக்க தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 1 லட்சத்து 85 ஆயிரத்து 383 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 7ம் தேதி முதல் வரும் 9ம் தேதி வரை வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக நாள் மற்றும் நேரம் ரேசன் கடை முன்பாக காட்சிப்படுத்தப்படும். 12ம் தேதி வெள்ளிகிழமையன்று அனைத்து ரேசன் கடைகளும் செயல்படும். ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ரேசன் கடைகளின் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாகவே மேற்கொள்ளப்படும். விரல் ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத அட்டைதாரர்களுக்கு மட்டும், சம்பந்தப்பட்ட நபர் நேரில் வருகை தருவதை உறுதி செய்யப்பட்டு பதிவேட்டில் கையொப்பம் பெற்று பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்படும்.

எக்காரணத்தை கொண்டும், அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பரிசுத்தொகை பெற அனுமதி வழங்கப்பட மாட்டாது.ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் மாநில அளவில் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களிலும் மாவட்ட அளவிலான 0423-2441216 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

எனவே மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களை தவிர்த்து மற்ற அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்க்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசினை பெற்று கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்தில் 1.85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Pongal ,Aruna ,Dinakaran ,
× RELATED மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்