×

பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்யும் செங்கரும்பு,மஞ்சளுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்

*அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை : பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாராகும் செங்கரும்பு, மஞ்சள் கொத்துக்களை கூட்டுறவு மூலம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தைப்பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனித்தனி சிறப்பு உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

பொங்கல் பண்டிகையில் செங்கரும்பிற்கு முக்கியத்துவம் உண்டு. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காகவே சிவகங்கை அருகே கீழச்சாலூர், மேலச்சாலூர், கொளுஞ்சிப்பட்டி, பெருமாள்பட்டி, அழங்கன்பட்டி, பாப்பாகுடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த வருடம் ஓரளவு மழை பெய்ததால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

இதனால் கிணற்று பாசன நீரினை பயன்படுத்தி கரும்புகள் நடவு செய்து தற்போது விற்பனைக்கு தயாராக வளர்ந்துள்ளது. இதேபோல் மஞ்சள் கொத்துக்களும் விவசாயிகள் இந்த பகுதியில் பயிரிட்டுள்ளனர். இந்த செங்கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் சிவகங்கை, புதுக்கோட்டை, மேலூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். சென்ற வருடம் ஒரு வண்டி கரும்பு 300 கரும்புகள் 4 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த வருடம் மழையால் சில விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்புகள் சாய்ந்து சேதமடைந்தது. இதனால் ஒரு வண்டி கரும்புகள் 5ஆயிரம் முதல் 5,500 வரை கிடைத்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்கப்படும் செங்கரும்புகள் இங்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சென்ற வருடம் ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. (வெட்டுக்கூலி ஏற்றுக்கூலி விவசாயிகளை சேர்ந்தது). இந்த வருடம் உரவிலை அதிகரிப்பு வேலை ஆட்கள் கூலி அதிகமாகி விட்டதால் ஒரு வண்டி கரும்பிற்கு 8ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருமாள்பட்டி விவசாயி பாண்டி கூறியதாவது: சென்ற வருடம் ஒரு வண்டி கரும்பிற்கு 4,500க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் 5ஆயிரம் வரை எதிர் பார்க்கிறோம். மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகளுக்கு சென்ற வருடம் 7000 வழங்கப்பட்டது. இந்த வருடம் உரம் விலை உயர்வு வேலையாட்கள் கூலி உயர்வினால் 8000 வரை கூட்டுறவுத் துறையினர் வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலச்சாலூர் விவசாயி வெள்ளைகண்ணு: இந்த வருடம் ஓரளவு மழை பெய்து கிணறுகளில் தண்ணீர் உள்ளது. இதன் மூலம் மஞ்சள் கொத்துக்கள் அதிகளவு பயிரிட்டுள்ளனர். சென்ற வருடம்மஞ்சள் கொத்துக்களின் அளவை வைத்து 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் 20 ரூபாய் கிடைத்தால் எங்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

The post பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்யும் செங்கரும்பு,மஞ்சளுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Sivaganga ,Bogi Pongal ,Pongal ,
× RELATED சிவகங்கையில் அடித்து கொட்டிய ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ‘குஷி’