×

அரசியல் எதிரிகளின் கடிதத்தின் அடிப்படையிலேயே எனக்கு எதிரான வழக்கு வேலூருக்கு மாற்றம்: ஐகோர்ட்டில் அமைச்சர் பொன்முடி தரப்பு வாதம்

சென்னை: கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, பொன்முடியின் அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பின்னர்தான் வழக்கின் விசாரணை விழுப்புரத்திலிருந்து, வேலூருக்கு மாற்றப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்று வாதிட்டார்.

அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். அதற்குள் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விட்டது. இருப்பினும், லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன் என்றார். இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post அரசியல் எதிரிகளின் கடிதத்தின் அடிப்படையிலேயே எனக்கு எதிரான வழக்கு வேலூருக்கு மாற்றம்: ஐகோர்ட்டில் அமைச்சர் பொன்முடி தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Minister ,Ponmudi ,ICourt ,Chennai ,DMK ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...