×

விஷச்சாராய வழக்கில் 7 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்தும் நீக்கம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கடந்த 13ம் தேதி அமரன் என்பவர் விற்ற விஷச்சாராயத்தை அப்பகுதியை சேர்ந்த பலர் வாங்கி குடித்துள்ளனர். இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு முண்டியப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை ,பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் அருந்தியுள்ளனர். இந்த 2 இடங்களிலும் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை செங்கல்பட்டு, மரக்காணம் விஷச்சாராய வழக்கில் அமாவாசை, ராஜேஷ், வேலு, நரேன், சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் விஷச் சாராய வழக்கில் மேலும் இருவரை போலீஸ் கைது செய்தது. புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை, பர்கத்துல்லாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழுமலையின் ஆலையில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட ரசாயன பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்தது.மேலும் செங்கல்பட்டு விஷ சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் விஜயகுமாரை கைது செய்து சித்தாமூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விஷச் சாராய வழக்கில் சிக்கிய விஜயகுமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்பட்டதாக பாஜக மாவட்ட தலைவர் மோகனராஜா அறிவித்துள்ளார்.

The post விஷச்சாராய வழக்கில் 7 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்தும் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Viluppuram ,Amaran ,Echirikuppam ,Marakkanam, Viluppuram district ,Dinakaran ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!