காற்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. பெயரை அவர் வாழ்ந்த நகரில் ஒரு தெருவுக்கு சூட்டியது மகிழ்ச்சி: முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

சென்னை: காற்றில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. பெயரை அவர் வாழ்ந்த நகரில் ஒரு தெருவுக்கு சூட்டியது மகிழ்ச்சி என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகில் வேறெந்தப் பாடகராலும் நிகர் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வேறு பல இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். உலகெங்கிலும் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள எஸ்.பி.பி கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியன்று உயிரிழந்தார்.

அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எஸ்.பி.பியின் புகழைப் போற்றும் வகையில் சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. இத்தகைய முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாடகர் S.P.பாலசுப்ரமணியம் மகன் S.P.B சரண் வீடியோ வெளியிட்டிருந்தார். காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட முதல்வருக்கு பல்வேறு திரைத்துறையினர் நன்றி தெரிவித்து வரும் நிலையில், கலைஞர்கள் மீது முதலமைச்சர் எவ்வளவு காதல் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார. அதில்,

காற்றில் எப்போதும்
வாழ்ந்துகொண்டிருக்கும்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின்
திருப்பெயரை
அவர் வாழ்ந்த நகரின்
ஒரு தெருவுக்குச் சூட்டியிருப்பது
பெருமகிழ்ச்சி தருகிறது

“காற்றின் தேசம் எங்கும் – எந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும்- எந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” என்று
அவர் பாடிய பாடல்
கவிதையாய் இருக்கலாம்
கலை அலங்காரமாய் இருக்கலாம்

ஆனால் பூமியில்
அவருக்குக் கிடைத்த
காலக் கல்வெட்டு இதுதான்

கலைஞர்கள் மீது
மாண்புமிகு முதலமைச்சர்
எவ்வளவு காதல்
கொண்டிருக்கிறார் என்பதற்கு
இதுவே சான்று

நல்ல செயலுக்கு நன்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post காற்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. பெயரை அவர் வாழ்ந்த நகரில் ஒரு தெருவுக்கு சூட்டியது மகிழ்ச்சி: முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து நன்றி appeared first on Dinakaran.

Related Stories: