×

பெற்றோருக்கு பிரதமர் மோடி அறிவுரை பிள்ளைகளின் ரிப்போர்ட் கார்டை விசிட்டிங் கார்டாக பார்க்காதீங்க

புதுடெல்லி: ‘பிள்ளைகளின் ரிப்போர்ட் கார்டை, பெற்றோர் தங்களின் விசிட்டிங் கார்டாக கருதக் கூடாது’ என பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார். நாடு முழுவதும் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறது. ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனும் இந்நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

நம் குழந்தைகளுக்கு மன உறுதியை ஊட்டுவதும், அழுத்தங்களைச் சமாளிக்க உதவுவதும் மிகவும் முக்கியம். அழுத்தம் என்பது தொடர்ந்து உருவாகிக் கொண்டேதான் இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எந்த வித அழுத்தத்தையும் தாங்கும் திறன் கொண்டவராக குழந்தைகளை மாற்ற வேண்டும். அழுத்தங்களுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறாத பெற்றோர்கள், தங்களைப் பற்றி வெளி உலகிற்கு சொல்வதற்கு எதுவும் இல்லாதவர்கள் அல்லது தங்களின் சாதனை, வெற்றிகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்த விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் ரிப்போர்ட் கார்டை, தங்களின் விசிட்டிங் கார்டாக ஆக்குவதை பார்க்கிறோம். அவர்கள் யாரையாவது சந்தித்தால், தங்கள் குழந்தையின் படிப்பு திறனைப் பற்றி பேசுகிறார்கள். இது நல்லதல்ல. மேலும் தங்கள் குழந்தையை பிற குழந்தைகளுடன் சில பெற்றோர் ஒப்பிடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட்டாகச் சமாளிக்க வேண்டும். ஆசிரியர்கள் படிப்பை தாண்டி மாணவர்களுடனான தொடர்பை விரிவுபடுத்த வேண்டும். இதனால் மாணவர்கள் சிறிய பிரச்னைகளுக்கு கூட ஆசிரியர்களை அணுக முடியும். ஆசிரியர், மாணவர் இடையிலான பிணைப்பு ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளம். எந்த வித அழுத்தத்தையும் நம்மால் சமாளிக்க முடியும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடன் நீங்கள் போட்டி போடுங்கள். எப்போதும் நிலைமை அதுவாகவே மாறும் என நான் காத்திருப்பதில்லை. சவாலுக்கே சவால் விடுவதுதான் என இயற்கையான குணம். தவறே செய்தாலும், அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வேன். தவறுக்காக ஏமாற்றுமடைந்து உட்கார்ந்து விட மாட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* ரீல்ஸ் வேண்டாம்

மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘மொபைல் மோனுக்கு கூட ரீசார்ஜ் தேவை. அதே போல, நம் உடலும் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். சரியான நேரத்தில் மாணவர்கள் தூங்க வேண்டும். தூங்கும் சமயத்தில் மொபைலில் ரீல்ஸ் பார்ப்பதையோ, கேம்ஸ் விளையாடுவதையோ தவிர்க்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்திற்கு நல்ல உறக்கம் அவசியம். வழக்கமான உடற்பயிற்சியும் வேண்டும். சாப்பிடும் போது போன் பார்க்காதீங்க. வீட்டிலேயே ‘சாதனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி’யை உருவாக்குங்கள்’’ என்றார்.

The post பெற்றோருக்கு பிரதமர் மோடி அறிவுரை பிள்ளைகளின் ரிப்போர்ட் கார்டை விசிட்டிங் கார்டாக பார்க்காதீங்க appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...