×

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உட்பட 5 நாடுகள்; பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்பு


புதுடெல்லி: ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் செல்லும் பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடுகளில் தங்கியிருப்பார். அவர் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் ஜூலை 2 முதல் 9ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு செல்கிறார். குறிப்பாக கானா, டிரினிடாட், டொபேகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த நீண்ட பயணத்தின் முக்கிய அம்சமாக, பிரேசிலில் நடைபெறவிருக்கும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த உச்சி மாநாட்டில், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தப் பயணத்தின் தொடக்கமாக, ஜூலை 2 அன்று கானாவிற்கு பிரதமர் செல்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் டிரினிடாட் மற்றும் டொபேகோவிற்கும், ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் அர்ஜென்டினாவிற்கும் சென்று, அந்நாட்டுத் தலைவர்களுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

பின்னர் ஜூலை 5 முதல் 8ம் தேதி வரை பிரேசிலில் தங்கியிருந்து பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதுடன், அந்நாட்டு அதிபர் லூலா டா சில்வாவையும் சந்தித்துப் பேசுகிறார். தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, ஜூலை 9ம் தேதி அன்று நமீபியா செல்லும் பிரதமர், அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

The post ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உட்பட 5 நாடுகள்; பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Africa ,South America ,PM Modi ,BRICS summit ,NEW DELHI ,India ,Africa, ,Days Abroad ,Dinakaran ,
× RELATED திரைப்படத்தை பற்றி அவதூறு கருத்து...