×

ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: ஊட்டியில் இதமான காலநிலை நிலவிய நிலையில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா மற்றும் கூடலூர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோல், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பொழிவு இருந்தது. மழை காரணமாக மண்சரிவு, மரங்கள் விழுதல் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. மழை காரணமாக ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக சரிந்தது. கடந்த மாத இறுதியில் கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலச்சரிவு சம்பவத்தால் கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இதனால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருந்து மழையின் தாக்கம் குறைந்த மேகமூட்டமான காலநிலையும், சில சமயங்களில் வெயிலான காலநிலையும் நிலவியது. இதனால், ஊட்டி நகரில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் மிதமான குளுகுளு மற்றும் வெயிலான காலநிலை நிலவியது. இதனால், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. கேரள சுற்றுலா பயணிகள் கூட்டமும் காணப்பட்டது. இதேபோல், ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

 

The post ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Botanical Gardens ,Nilgiris ,Kunta ,Kudalur ,Dinakaran ,
× RELATED தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற கோரிக்கை