×

சிங்கப்பூர் பூங்காக்களுக்கு நிகராக சென்னையில் உள்ள பூங்காக்களை உலக தரத்தில் மேம்படுத்த திட்டம்: தமிழக அரசு ஆலோசனை

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களை சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களுக்கு நிகராக மேம்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் இளைப்பாறவும், பொழுதை கழிக்கவும் முக்கிய இடமாக விளங்குவது பூங்காக்கள்தான். கான்கிரீட் கட்டிடத்திற்கு மத்தியில் நெருக்கடியான சூழலில் வசிக்கும் நகரத்து மக்கள், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடவும், வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் சென்று இளைப்பாறிவிட்டு வரவும் பூங்காக்களையே முக்கியமாக தேர்வு செய்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சென்னை நகரின் பல முக்கிய இடங்களில் பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மைய தடுப்பு பூங்காக்கள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. இந்த 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக 145 பூங்காக்களும், பொதுமக்கள் தத்தெடுப்பு முறையில் 57 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூங்காவிலும் 50 முதல் 100 எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், அனைத்து மரங்களிலும், சுவர்களிலும் பச்சை, மஞ்சள் நிறங்களில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குறைபாடுகள் சரிசெய்தல் மற்றும் உயர்தரத்தில் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பூங்காக்களில் பொதுமக்கள் அமரும் இருக்கைகளை சீரமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், கூடுதலாக தேவைப்படும் அளவுக்கு பொதுமக்கள் உட்காருவதற்கான இருக்கைகள் அமைத்தல், நடைபயிற்சி பாதைகள் தேவைப்படும் இடங்களில் அமைத்தல், ஏற்கனவே உள்ள நடைபாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு சீரமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், மின்விளக்குகளை சரிசெய்து பூங்காவில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒளிரச்செய்தல், பூங்காவின் நுழைவாயிலில் அழகிய நிறத்தில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள செயற்கை நீரூற்று மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை செயல்படும் வகையில் புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள சில முக்கிய பூங்காக்களை சிங்கப்பூர் பூங்காக்கள் போல மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது சிங்கப்பூரில் உள்ள அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதிகாரிகள் தமிழகம் வருகை தந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள பூங்காக்களை சிங்கப்பூர் மற்றும் உலக தரத்திற்கு மேம்படுத்தவும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. செம்மொழி பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு பூங்காக்களை வடிவமைக்க திட்டமிடப்படுள்ளதாகவும், செம்மொழி பூங்காவில் இருந்து நேரடியாக பாதை மூலம் எதிரே உள்ள பூங்காவிற்கு செல்லும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா, சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா, துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,825 கோடி ஒதுக்கீடு என சென்னை நகரை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பூங்காக்களையும் மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பூங்காக்கள் தரம் உயர்த்தும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பூங்காக்களின் அழகு இன்னும் மெருகேறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சிங்கப்பூர் பூங்காக்களுக்கு நிகராக சென்னையில் உள்ள பூங்காக்களை உலக தரத்தில் மேம்படுத்த திட்டம்: தமிழக அரசு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Singapore ,Tamil Nadu Govt. ,Tamil Nadu government ,
× RELATED உண்மைக்கு புறம்பான செய்தி...