×

சோதனை அடிப்படையில் அடுத்தாண்டு‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலில் இறக்க திட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சமுத்ரயாயன் திட்டத்தின் கீழ் ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் கடலில் இறக்கி ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தியா விண்வெளியில் வெற்றிகரமாக பல்வேறு சாதனைகளை செய்த நிலையில் தற்போது ஆழ்கடலில் சாதனை மேற்கொள்ள தயாராகி வருகிறது. 2021ம் ஆண்டு ‘சமுத்ரயான்’ என்ற கடலில் ஆய்வு செய்யும் பணியை அறிமுகப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் கடல் ஆராயும் நாடுகளுடன் இந்தியா இணைந்தது. இந்த சமுத்ரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக இந்தியா மூன்று பணியாளர்களை 6,000 மீட்டர் ஆழத்துக்கு ‘மத்ஸ்யா 6000’ என்ற வாகனத்தில் அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளது.

இந்த ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் என்பது 2020-21 முதல் 2025 – 26 வரையாகும். மிக நீண்ட கடற்பரப்பை கொண்டிருக்கும் இந்தியா, கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது. இந்த வாகனம் சாதாரண செயல்பாட்டின் கீழ் 12 மணிநேரமும், மனித பாதுகாப்புக்காக அவசரகாலத்தில் 96 மணிநேரமும் தாங்கும் திறன் கொண்டது. வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்துள்ளதுடன், வாகனத்தின் பல்வேறு கூறுகளை சோதனை செய்து வருகின்றனர்.

இந்த ‘மத்ஸ்யா 6000’ வாகனம் தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் கடலில் இறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: இந்த சமுத்ரயான் திட்டம் 2026க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் அதன் ஒரு முன்னோட்டமாக அடுத்த ஆண்டு முதல் அரையாண்டில் இந்த ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை 500 மீட்டர் கடலில் இறக்கி சோதனை செய்ய இருக்கிறோம். கடந்த ஜூன் மாதத்தில் டைட்டானிக் கப்பல் சென்று வெடித்த நிலையில் இந்த வாகனம் முழு முயற்சியுடன் பாதுகாப்பான வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

The post சோதனை அடிப்படையில் அடுத்தாண்டு‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலில் இறக்க திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...