×

புகைப்படத்துடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் பழைய நடைமுறையிலேயே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளிக்கல்வி இணை இயக்குனரகம் உத்தரவு

வேலூர்: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பழைய நடைமுறையிலேயே வழங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் புகைப்படத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பள்ளி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச பஸ் பாஸ், ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. கடந்த 2022-23ம் கல்வி ஆண்டு மத்தியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டில் இலவச பஸ் பாஸ் பெறும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரம் பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, நடப்பு ஆண்டும் பழைய நடைமுறையையே பின்பற்ற தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, 2023-24ம் கல்வி ஆண்டுக்கு அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் பெற அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பெற்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
மேலும், இதற்காக மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கூகுள் ஷீட்டில் பூர்த்தி செய்து தொகுப்பு அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

The post புகைப்படத்துடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் பழைய நடைமுறையிலேயே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளிக்கல்வி இணை இயக்குனரகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : -Directorate of Schooleducation ,Vellore ,Co-Directorate of School Education ,Dinakaran ,
× RELATED ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும்...