×

கூர்நோக்கு இல்லங்களில் உள்ள பிரச்னை குறித்து அறிய ஒரு நபர் குழு விசாரணையை தொடங்கியது: பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு

சென்னை: தமிழ்நாட்டில் இளம் சிறார்களுக்கான (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாக்கப்பட்ட இல்லங்களில் பிரச்னைகள் உள்ளதாக சமூக நலத்துறைக்கு பொதுமக்கள் தரப்பில் வந்த புகார்களின் பேரில், அது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 4 மாதங்களில் மேற்கண்ட இல்லங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, குழுவினர் ஆய்வு செய்ய உள்ள பிரச்னைகள் விவரம் வருமாறு: இல்லங்களில் தேர்வு, தங்க வைத்தல் மற்றும் விடுவித்தல் குறித்த பிரச்னைகளை ஆராய்ந்து தேவையெனில் அதற்கான சீர்திருத்தங்கள். தற்பொழுதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆராய்ந்து தேவை, மேம்பாடுத்துதல், பராமரிப்பு. உடல்நல சோதனைகள், மருத்துவ வசதிகள் நிலை இவற்றிற்கான தற்போதைய செயல்முறைகளை மதிப்பீடு. உறைவிடவாசிகளின் கல்வி மற்றும் பயிற்சி இவை குறித்த தற்போதைய நடைமுறைகளுடன், தொழில் சார்ந்த பயிற்சி இவற்றுக்கான, இல்லப் பணியாளர்கள் குறித்து சீராய்வு.

உணவுக்கான தரம் மற்றும் அளவு பற்றி தற்பொழுதுள்ள நியமனங்கள். இல்லங்களிலுள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான தேவை மற்றும் தகுதிகள். பொருள் சார்ந்த நிபுணர்கள், அரசு சாரா நிறுவனங்கள் இவர்களின் பங்கு மற்றும் ஈடுபாடு. உறைவிட காலத்துக்கு பின் கவனிப்பு மற்றும் அதன் நிலை குறித்து சீராய்வு. இளம் சிறார் நீதி சட்டம் மற்றும் அதன் விதிகள் குறித்த தற்போதைய சட்ட ஏற்பாடுகள் பற்றி வேறு ஏதாவது பரிந்துரைகள். அதன்படி, இந்த பிரச்னைகளில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இவை குறித்து தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஒரு நபர் குழுவிடம் தபாலிலோ அல்லது நேரிலோ சந்தித்து வழங்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகவரி: ஒருநபர் குழு, 147, கச்சேரி சாலை, மயிலாப்பூர் சென்னை – 4.

The post கூர்நோக்கு இல்லங்களில் உள்ள பிரச்னை குறித்து அறிய ஒரு நபர் குழு விசாரணையை தொடங்கியது: பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Person Group ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...