×

பெரம்பூர் நிதி லிமிடெட் என்ற பெயரில் ரூ.200 கோடி வரை சுருட்டிய நிதி நிறுவனத்திற்கு ‘சீல்’: கோடிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் புலம்பல்

சென்னை: பெரம்பூர் நிதி லிமிடெட் என்ற பெயரில் ரூ.200 கோடி வரை சுருட்டிய நிதி நிறுவனத்துக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். பெரம்பூர் பாரதி சாலையில், கடந்த 1961ம் ஆண்டு முதல் தி பரஸ்பர சகாய நிதி பெரம்பூர் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு 5 மாதமாக வட்டி தரவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் அந்நிறுவனத்தில் சென்று டெபாசிட் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால், ஊழியர்கள், வட்டி மட்டுமே தர முடியும் என நிறுவனம் தரப்பில் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்தாலும் ரூ.5 ஆயிரம் அல்லது ரூ.2500 மட்டுமே மாதம்தோறும் தர முடியும் என பொதுமக்களிடம் கூறினர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 450 பேர் அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா உள்ளிட்ட 7 பேர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 8 மணி முதல் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள நிதி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த நிதி நிறுவனத்தில் இருந்து 7 கம்ப்யூட்டர்கள், 5 பைகளில் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த நிதி நிறுவனத்தை இழுத்து மூடி சீல் வைத்தனர்.

காலையில் தொடங்கிய இந்த பணி நேற்று மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. நிதி நிறுவனம் மூடப்படுவதை அறிந்த வாடிக்கையாளர்கள் பலரும் நிதி நிறுவனத்திற்கு வந்து முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, உரிய விளக்கம் அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில் 1,800க்கும் மேற்பட்டோர் சுமார் ரூ.200 கோடி வரை பணம் முதலீடு செய்துள்ளதாகவும், இதில் 21 பேர் ஒரு கோடி ரூபாயும், பலர் லட்சக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் 5 பேர் பங்குதாரர்களாக இருந்ததும், ஏற்கனவே இந்த நிதி நிறுவனத்தை நடத்திய சிலர் புரசைவாக்கத்தில் புரசைவாக்கம் சாஸ்வத தனவர்த்தன நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றி உள்ளனர். தற்போது பெரம்பூர் நிதி நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வசந்தி ஈஸ்வரப்பன், அவரது மகள் சக்தி ஐஸ்வர்யா, உறவினர் ராஜம் ஆகிய 3 பேரையும் பிடித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் இவர்களது உறவினரான ஈஸ்வரப்பன், கணேசன் ஆகியோருக்கும் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • கதறி அழுத முதலீட்டாளர்கள்
    குறிப்பிட்ட அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த நபர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். தங்கள் ஓய்வூதிய பணத்தை குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்துவிட்டு மாதம் வரும் வட்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். மொத்தமாக ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என அவர்கள் டெபாசிட் செய்திருந்தனர். அவர்களது மொத்த பணமும் நேற்று பறிபோனதை அறிந்து நிறுவனத்திற்கு வந்து கதறி அழுதனர்.
  • இன்ஸ்பெக்டரின் பொறுமை பதில்
    நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சுகுணா, பொதுமக்களிடம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்து புகார் தாருங்கள் என பதில் அளித்தார்.

The post பெரம்பூர் நிதி லிமிடெட் என்ற பெயரில் ரூ.200 கோடி வரை சுருட்டிய நிதி நிறுவனத்திற்கு ‘சீல்’: கோடிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Perambur Niti Ltd ,CHENNAI ,Economic Crimes Division ,Perambur Niti Limited ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்