×

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல வளர்ந்து ஆழமான வேர்களை எடுத்து மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திடவும், பயிர்க்கடன், கறவை மாட்டுக்கடன், நகைக்கடன், சுய உதவிக்குழுக்கடன், சிறுவணிக்கடன், மகளிர் தொழிற்முனைவோர்கடன், மகளிர் சம்பளக்கடன், வீட்டுவசதிக்கடன், போன்ற பல்வேறு வகையிலான கடன்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 34,586 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் 2,10,74,252 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், 3,000 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான 2,966 விவசாய இயந்திரங்கள் மற்றும் 3,935 கருவிகள் குறைந்த விலையில் வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. 380 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20% தள்ளுபடி விலையில் தரமான மருந்துகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர்களான மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் இளைஞர் ஈர்ப்பு முகாம்கள் மாதம் தோறும் நடத்தப்பட்டு ஊரக மக்களிடையே கூட்டுறவு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் பள்ளி கல்லூரிகளில் இளைஞர் ஈர்ப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே கூட்டுறவு இயக்கம் பற்றியம் அதன் தத்துவங்களை விதைத்து வருகின்றது.

சர்வதேச கூட்டுறவு தினத்தை ஆண்டுதோறும் ஜீலை மாதம் முதல் சனிக்கிழமை அன்று 1923ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன” என்ற மைய கருத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்ட முகாம்கள், நடத்தப்பட்டு ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு சர்வதேச கூட்டுறவு தினத்தைப்பற்றிய விழிப்புணர்வு எழுத்தப்பட்டுள்ளது. மேலும், ரத்ததான முகாம், மரக்கன்றுகள் நடும் முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கங்களாக செயல்படும் 26 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் இச்சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே “இன்றைய கூட்டுறவின் வளர்ச்சியில் மகளிரின் பங்கு” என்ற தலைப்பில் பேச்சு போட்டிகள் மற்றும் “உலக பொருளாதாரத்தில் கூட்டுறவின் ஈடுபாடு” என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்று அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் “உறுப்பினர் சேர்க்கை முகாம்” மற்றும் “கடன் மேளா” நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,KR. Peryakarapan ,Chennai ,Tamil Nadu ,K. R. ,Peryakarapan ,Dinakaran ,
× RELATED புழல் மத்திய சிறையில் கைதிகளை...