திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காக்களூரில் இயங்கி வரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பெயின்ட் நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 3 தொழிலாளர்கள் மற்றும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சத்தை தமிழ்நாடு அரசு சார்பில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் இயங்கி வரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜென் பெயின்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 31ம் தேதி மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம் மனைவி சுகந்தி(55), கடம்பத்தூர், பெரிய தெருவை சேர்ந்த பார்த்தசாரதி(57), சென்னையை அடுத்த அம்பத்தூர், விஜயலட்சுமிபுரம், பிரகாசம் தெருவை சேர்ந்த புஷ்கர்(37) ஆகிய 3 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தை சேர்ந்த இருசப்பன் மகன் சீனிவாசன்(37) என்பவர் மீது இந்நிறுவனத்தின் சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், தனித் துணை கலெக்டர் கணேசன், கலெக்டரின் அலுவலக மேலாளர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
The post காக்களூர் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: தமிழ்நாடு அரசு சார்பில் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.