×

கொத்தடிமை அதிமுகவுக்கும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பாஜவுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: கொத்தடிமை கூட்டமாக இருக்கும் அதிமுகவுக்கும் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத பாஜவுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டியபாளையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 22.2.2023 அன்று சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினேன். அன்றில் இருந்தே நாடாளுமன்ற தேர்தல் பணியை துவக்கி விட்டோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், நமது ஏதோ ஒரு திட்டத்தில் கண்டிப்பாக பயன் அடைந்திருப்பார்கள்.

கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில், ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளோம். நாம் அளித்த தேர்தல் வாக்குறுதியில் இது மிகப்பெரியது. இதையும் நிறைவேற்றி விட்டோம். இத்திட்டத்திற்கு, மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. நாம் வழங்கிய காலை உணவு திட்டம் மூலமாக, லட்சக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளில் பசியில்லாமல் படிக்கிறார்கள். இதுவும், நமது மகத்தான திட்டம். இப்படி அன்றாடம், நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், ஒன்றியத்தில் ஒரு ஆட்சி இருக்கிறது. அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 10 ஆண்டாக அந்த ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி ஏதாவது நிறைவேற்றி இருக்கிறாரா? வெளிநாடுகளில் பதுக்கிய இந்திய கருப்பு பணத்தை மீட்பேன் என்றார்.

மீட்டாரா? மீட்கப்பட்ட கருப்பு பணத்தை ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்து தருவேன், வங்கியில் டெபாசிட் செய்வேன் என்றார். தந்தாரா? மகளிருக்கு நாம் கொடுக்கும் ஆயிரம் ரூபாயில்கூட கை வைக்கிறார்கள். நாம் அளிக்கும் பணத்தை, நமது தாய்மார்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள். வங்கிக்கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லை எனக்கூறி அந்த பணத்தையும் பிடித்தம் செய்கிறார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் என்றார் பிரதமர் மோடி. வேலைவாய்ப்பு அளித்தாரா? கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளது. நம் இளைஞர்களை, படித்த பட்டதாரிகளை, பக்கோடா விற்க செல்லுங்கள் என்கிறார் பிரதமர் மோடி.

வரும் 2027ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதார நாடாக மாறும் என்றார். ஆனால், பணம் மதிப்பிழப்பு செய்து, இந்திய பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிட்டார். பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக தொழில்கள் அடியோடு நசிந்து விட்டன. டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் டெத் சிட்டியாக மாறிவிட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, அந்த அந்தஸ்தை இழந்து தவிக்கிறது. இதுதான் ஒன்றிய அரசின் சாதனை. நமது மாநிலத்தில் தொழில்துறையை மீட்க, நாம்தான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியில் ஒன்றையாவது நிறைவேற்றி உள்ளாரா? குறிப்பாக, தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில், சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றார். ஆனால், ஒரு துரும்பைகூட அசைக்கவில்லை. ஈரோடு ஜவுளித்தொழிலில் உள்கட்டமைப்பு வசதி செய்து தருவோம் என்றார், செய்யவில்லை. புதிதாக 4 நகரங்களில் விமான நிலையம் அமைப்போம் என்றார். அமைத்தாரா? இப்படி டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? எல்லாம் பத்திரமாக வாக்குறுதியாகவே இருக்கிறது. நாங்கள், எங்கள் ஆட்சியின் சாதனை பட்டியலை சொல்கிறோம். உங்களால், உங்கள் ஆட்சியின் சாதனை பட்டியலை சொல்ல முடியுமா? சந்திரயான்-3 விண்கலம் விட்டோம் என்கிறார். ஜி20 மாநாடு நடத்தினோம் என்கிறார். அந்தந்த ஆண்டில் ஜி20 அமைப்புக்கு தலைமை தாங்கும் நாடுதான் அந்த மாநட்டை நடத்த வேண்டும்.

அதனால், அந்த மாநாட்டை நாங்கள்தான் நடத்தினோம் என அவர்கள் உரிமை கோர முடியாது. சந்திரயான்-3 திட்டத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனையில் முன்னாள் பிரதமர்கள் நேரு, மன்மோகன்சிங் பங்கும் உள்ளது. அதை, மறந்து விடக்கூடாது. கடந்த 10 ஆண்டாக நாம் எதுவும் செய்யவில்லை, மக்கள் திருப்பி அடிப்பார்கள் என பயந்து, இப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்து, இதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என கணக்கு போடுகிறார்கள். தேவையில்லாமல் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்ற மசோதாவையும் தாக்கல் செய்துள்ளார்கள். இதனால், தென்மாநிலங்களில் மக்களவை தொகுதி எண்ணிக்கை பெருமளவில் குறையும்.

தென்மாநிலங்களில் பாஜ டெபாசிட்கூட வாங்க முடியாத கட்சியாக இருக்கிறது. அதனால்தான், அடிமை அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணி வைத்துள்ளார்கள். சண்டை போடுவதாக வெளியே நடிக்கிறார்கள். ஆனால், உள்ளே நட்பு நீடிக்கிறது. தோப்புக்கரணம் போடக்கூடிய கட்சி அதிமுக. பல்லாக்கு தூக்கும் பழனிசாமி ஒருவர் இருக்கிறார். அந்த எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ஏன் தெரியுமா? ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. கொடநாடு வழக்கு நெருக்குகிறது. இதிலிருந்து தப்பித்து விடலாம் எனக்கருதி, டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். சென்னையில் இருந்து டெல்லி சென்றால் தெரிந்துவிடும், எனக்கருதி கொச்சியில் இருந்து டெல்லி செல்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், அதிமுகவுக்கு இப்போது இருக்கிற சீட்டும் இனி இருக்காது.

பாஜவை எதிர்ப்பதுபோல் மக்களிடம் பாசாங்கு காட்டிக்கொண்டு, உள்ளே பாஜ தலைவர்களை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போலவே இம்முறையும் தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் பாஜ படுதோல்வி அடையும். நம் இயக்க தோழர்கள், கட்சிக்காக உழையுங்கள், மக்களுக்காக உழையுங்கள். அதற்கான பலன் உங்களை தேடி வரும். இயக்கத்துக்காக உழைக்கும் தொண்டர்களை கழகம் ஒருபோதும் கைவிடாது. அடுத்தமுறை உங்களை நான், வந்து சந்திக்கும்போது வெற்றி செய்தியை மட்டுமே கேட்க வேண்டும். அதற்காக உழைப்போம், நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, ராஜேஷ்குமார், திருச்சி சிவா, மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் எம்எல்ஏ, நா.கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி ஏதாவது நிறைவேற்றி இருக்கிறாரா?

* வெளிநாடுகளில் பதுக்கிய இந்திய கருப்பு பணத்தை மீட்பேன் என்றார். மீட்டாரா?

* மீட்கப்பட்ட கருப்பு பணத்தை ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்து தருவேன், வங்கியில் டெபாசிட் செய்வேன் என்றார். தந்தாரா?

The post கொத்தடிமை அதிமுகவுக்கும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பாஜவுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Chief Minister ,M.K.Stal ,Coimbatore ,
× RELATED அடுத்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம்