×

நெல்லை ஆற்றங்கரை குடியிருப்பை காலி செய்ய வந்ததாக கருதி மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்

*பரபரப்பு அடங்கியதால் நிம்மதி

நெல்லை : நெல்லை தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள அண்ணாநகர் ஆக்கிரமிப்பு குடியிருப்பை காலி செய்ய அலுவலர்கள் வந்ததாக எண்ணி மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதிய குடியிருப்பை பார்க்க அழைத்துச் செல்ல வந்த உண்மை நிலவரம் தெரியவந்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்த்தில் அண்ணாநகர் பகுதியில் 130 வீடுகள் உள்ளன. இவற்றில் ஆற்றங்கரையோரம் 113 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பார்வையிட்டு ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள 113 வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்களை ரெட்டியார்பட்டியில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட வாரியத்தின் அலுவலர்கள் வேனில் அழைத்துச் செல்ல 2 வேன்களுடன் மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள அண்ணா நகருக்கு வந்தனர்.

ஆனால் வீடுகளை காலி செய்ய வருவதாக குடியிருப்பு வாசிகள் கருதினர். அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம், நாங்கள் இங்கு பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்கிருந்து செல்ல விருப்பம் இல்லையெனக்கூறி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் திமுக கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் ஆகியோர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் இங்கேயே தங்க விருப்பம் தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பார்வையிடுவதற்காக குடியிருப்பவர்களை அழைத்துச் சென்று காண்பித்து, அவர்களுக்கு வீடுகள் பிடிக்கும் பட்சத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்காக அலுவலர்கள் வந்ததாக தெரிவித்தனர். பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டதால் வாரிய அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட அழைத்துச் செல்லும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post நெல்லை ஆற்றங்கரை குடியிருப்பை காலி செய்ய வந்ததாக கருதி மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Annanagar ,Nellie Tamiraparani ,
× RELATED அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில்...