×

அச்சிறுப்பாக்கம் அருகே ரயில்நிலையத்தை அகற்ற மக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே நேற்று மூடப்பட்ட ரயில் நிலையத்தின் மேற்கூரையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ரயிலை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை-விழுப்புரம் ரயில் மார்க்கத்தில், நீண்ட காலமாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரசங்கால் பகுதியில் ரயில்நிலையம் இயங்கி வந்தது. இங்கு விழுப்புரம் பாசஞ்சர், திருப்பதி பாசஞ்சர் உள்பட 3 ரயில்கள் நின்று, பயணிகளை ஏற்றி சென்று வந்தன. இந்த ரயில் நிலையத்தின் அங்கீகாரம் கடந்த 2013ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து கரசங்கால், நெடுங்கல், புறங்கால் உள்பட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கரசங்கால் ரயில் நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சகத்துக்கும் புகார்கள் அனுப்பி வந்தனர். இதற்கிடையே கடந்த ஓராண்டுக்கு முன் கரசங்கால் ரயில்நிலைய நடைமேடையின் மேற்கூரையை அகற்றும்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், நேற்று மீண்டும் கரசங்கால் ரயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் பிளாட்பாரங்களை இடிக்க ஜெசிபி இயந்திரங்களுடன் ரயில்வே அதிகாரிகள் வந்தனர்.

தகவலறிந்த கரசங்கால், நெடுங்கால் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், ரயில்நிலையத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயிலை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால், மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூக ஆர்வலர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இதைத் தொடர்ந்து, கரசங்கால் ரயில் நிலைய மேற்கூரைகள் மற்றும் பிளாட்பாரங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post அச்சிறுப்பாக்கம் அருகே ரயில்நிலையத்தை அகற்ற மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Achhupakam ,Dinakaraan ,
× RELATED சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும்...