*முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்டனர்
ராமநாதபுரம் : தை அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள், ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் நவபாசான தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் கடல் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்து வழிபாடு செய்தனர்.
தமிழ் மாதங்களில் தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை தினத்தன்று கடலில் புனித தீர்த்தமாடி தர்ப்பணம் கொடுத்தல் மற்றும் விரதம் இருப்பதன் மூலம் மூதாதையர்களை வரவேற்பதாகவும், தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் அவர்களை விடை கொடுத்து அனுப்புவதாகவும் ஆன்மீக ரீதியான நம்பிக்கை உள்ளது.
எனவே தை அமாவாசையன்று முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாளாக கருதப்படுவதால், இந்நாளில் பொதுமக்கள் பலரும் தீர்த்த தலங்களுக்கு சென்று புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது முக்கிய கடமையாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் நேற்று ராமேஸ்வரம் வந்து புனித தீர்த்தமாடிய பிறகு ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பிகை உடனுறை ராமநாதசுவாமியை வழிப்பட்டனர்.
இதனை போன்று தேவிப்பட்டினம் கடற்கரையில் உள்ள நவபாசான தீர்த்தம், ராமர் தீர்த்தம் மற்றும் திருப்புல்லாணி சேதுக்கரை கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பிறகு அங்குள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். சாயல்குடி அருகே மாரியூர் கடலில் திரளானோர் நீராடி தர்ப்பணம் கொடுத்து, அங்குள்ள பவளநிற வள்ளியம்மன் உடனுறை பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு மோட்ச தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.
முக்கிய கடற்கரைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசை காரணமாக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம், சேதுக்கரை மற்றும் தேவிபட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புற கோயில்களிலும் அமாவாசை விஷேச பூஜைகள், வழிபாடு நடந்தது.
திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் மற்றும் வராஹிஅம்மன் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுறை தரணீஸ்வரர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுறை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுறை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுறை ஆதிசிவன் சோமேஸ்வரர் ஆகிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடந்தது.
இதனை போன்று ஏனாதி பூங்குளத்து மாடன், ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி மற்றும் காணிக்கூர் பாதாள காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், ராக்கச்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தீர்த்தாண்டதானம் கடல்…
தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடலில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். இதையடுத்து இங்குள்ள சர்வ தீர்த்தத்தில் நீராடி புராண கால சிறப்பு வாய்ந்த சர்வ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தீர்த்தாண்டதானம் கடலில் நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
The post தை அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராட குவிந்த மக்கள் appeared first on Dinakaran.