திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண் மகள்களுடன் சுவாமி தரிசனம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மகள்களுடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது நம்பிக்கை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஆந்திரா துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் 11 நாட்கள் பிராயசித்த தீட்சை மேற்கொண்டார்.

இந்த தீட்சையை நிறைவு செய்யும் விதமாக நேற்று திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக பாத யாத்திரையாக திருமலைக்கு சென்றார். பின்னர் இன்று காலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். முன்னதாக துணை முதல்வர் பவன்கல்யாணின் இளைய மகள் கொனிடேலா பாலினா அஞ்சனி, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேவஸ்தான அதிகாரிகள் கொண்டு வந்த ‘உறுதிமொழி நம்பிக்கை’ பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

அதில், ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி கையெழுத்திட்டார். மகள் பாலினா அஞ்சனி மைனர் என்பதால், அவரது தந்தையான பவன் கல்யாணும் அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும்போது உறுதிமொழி நம்பிக்கை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என பாஜ உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ஜெகன்மோகன், தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்து கொண்டார். இந்நிலையில் பவன் கல்யாண் தனது மகளுக்காக அவரும் அவருடைய மகளும் நம்பிக்கை உறுதிமொழி ஏட்டில் கையெழுத்திட்டு சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண் மகள்களுடன் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: