×

பாட்னாவைத் தொடர்ந்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சி தலைவர்கள் பங்கேற்பு; இன்று முக்கிய முடிவுகள் அறிவிப்பு

பெங்களூரு: பாட்னாவை தொடர்ந்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்களுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா விருந்து கொடுத்தார். இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் பாஜ கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டார்.

இது தொடர்பாக பாஜவின் கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அதன் முதல் வெற்றியாக கடந்த மாதம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் 15 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று தொடங்கியது.

இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணைமுதல்வர் தேஜேஸ்வி யாதவ், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ்தாக்கரே, ஆர்ஜெடி தலைவர் லாலுபிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகமூபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்கு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஜி.பிரைன் உள்பட பலர் பெங்களூரு வந்தனர்.

சித்தராமையா விருந்து: பெங்களூரு வந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நேற்று இரவு விருந்து கொடுத்தார். இதில் அனைவரும் பங்கேற்றனர். விருந்தில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாற்றினர். அ மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் எதிரும் புதிருமாக போட்டியிட்டன. அந்த தேர்தலுக்கு பின் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், காங்கிரஸ் தலைவர்களும் ஒரே இடத்தில் கூடி உள்ளனர். இதே போல டெல்லி மாநில அதிகார போட்டி தொடர்பான அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரசுடனான மோதலை மறந்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலும் ஆலோசனை கூட்டத்திற்காக பெங்களூரு வந்துள்ளார். இது, பாஜவுக்கு எதிராக விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு: பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க நாட்டின் பல மாநிலங்களில் இருந்து தலைவர்கள் வந்துள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலை, எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடக்கும் தாஜ் வெஸ்டன்ட் ஓட்டலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டலுக்கு வரும் ஒவ்வொருவரும் பலத்த பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தின் 2வது மற்றும் கடைசி நாளான இன்று முறைப்படியான சந்திப்பு நடக்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர், கூட்டு பேரணி குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம். மேலும், பொது வேட்பாளர் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* முதல்வர் மு.க.ஸ்டாலினை டி.கே.சிவகுமார் வரவேற்றார்
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று பகல் 12.25 மணிக்கு வந்தார். அவருடன் எம்பி டி.ஆர்.பாலு வந்தார். விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வரை கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் சால்வை, மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜீரோ டிராபிக் வசதியுடன் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் பர்கூர் தொகுதி பேரவை உறுப்பினர் மதியழகன், ஓசூர் தொகுதி பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராசாமி உள்பட பலர் வரவேற்றனர்.

* இடதுசாரி-திரிணாமுல் மே.வங்கத்தில் சேருமா?
எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுபட்டது. தற்போது பாஜவுக்கு சாதகமாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் வாக்குப்பகிர்வை குறைக்க வேண்டும் என்பதே முயற்சி. 2004 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தந்தாலும் அக்கட்சி வேட்பாளர்களை 57 இடங்களில் வென்று 61 தொகுதிகளை கைப்பற்றி இருந்தோம். ஆனாலும் மன்மோகன் சிங் தலைமையில் 10 ஆண்டு சுமூகமாக நடந்தது. எனவே, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும், மம்தாவும் இணைய வாய்ப்பில்லை. நாங்களும் காங்கிரசும், பாஜ மற்றும் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து நிற்போம். மத்தியில் கூட்டணி எந்த வகையில் இருக்கும் என்பதை பின்னர் முடிவு செய்வோம்’’ என்றார்.

* புதிய அத்தியாயம்
பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் புதிய அத்தியாயம் ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், ‘‘ஜனநாயக விரோத ஆட்சி நடத்தும் பாஜ அரசு, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல், குறுக்கு வழியில் நாட்டில் தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்க வேண்டிய சிபிஐ, வருமான வரி துறை, அமலாக்கத்துறை ஆகிய வற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி வருகிறது.

இன்று (நேற்று) கூட தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற ஜனநாயக விரோத கொள்கை கொண்ட பாஜவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தலில் பாஜவை வீழ்த்துவதற்கான வியூகம் வகுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இந்த ஆலோசனை கூட்டம் தேசியளவில் புதிய அத்தியாயம் ஏற்படுத்தும்’’ என்றனர்.

* சரத் பவார் இன்று வருகை
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசில் இருந்து மூத்த தலைவர் அஜித் பவார் பிரிந்து பாஜவுடன் இணைந்ததால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதால் சரத் பவார் பெங்களூரு வரவில்லை. அவர் நாளை (இன்று) வருவதாக உறுதி அளித்துள்ளார். எல்லா தலைவர்களும் வருவார்கள். பாட்னா கூட்டத்தை விட அதிகமான தலைவர்கள் பெங்களூரு வருவார்கள்’’ என்றார்.

* பிரமாண்ட பேனர்
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள கட்சி தலைவர்களை வரவேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில், ரேஸ்கோர்ஸ் சாலையின் இருபுறமும் தலைவர்கள் உருவங்கள் கொண்ட பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தலைவர்களை வரவேற்க வைத்துள்ள பேனர்களில் கன்னட மொழி பயன்படுத்தாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து கன்னட அமைப்பினர் சில பேனர்களை கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

The post பாட்னாவைத் தொடர்ந்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சி தலைவர்கள் பங்கேற்பு; இன்று முக்கிய முடிவுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Patna ,Bengaluru ,Chief Minister ,M.K.Stalin ,Congress ,Sonia ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2...