×

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை: போலீஸ், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுடன் நாளை சந்திப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். இன்று அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை போலீஸ், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளனர். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகளை நேரில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்துவதற்காக, நேற்று இரவு 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் 3 துணை தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய 4 பேர் குழு சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தேர்தல் ஆணையர்கள் தங்குகின்றனர். இதைத்தொடர்ந்து, இன்று (23ம் தேதி) காலை 11.30 மணிக்கு அதே ஓட்டலில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கருத்துகளை கேட்டறிகின்றனர். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பார்கள். இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் நேரில் வரவழைத்து, அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இதையடுத்து நாளை (24ம் தேதி) காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். மதியம் 11 மணியில் இருந்து ஒரு மணிவரை வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, அன்று மாலை தலைமை செயலாளர், மாநில காவல்துறை தலைவர் உள்பட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் குறித்து நாளை மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த 2 நாள் ஆலோசனையின்போது, தமிழ்நாட்டில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பது, அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படி செய்ய வேண்டும், துணை ராணுவ படை பாதுகாப்புக்கு எத்தனை கம்பெனிகள் தேவைப்படும், தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் 2 நாள் ஆய்வு பணி மற்றும் கூட்டங்களை முடித்துக் கொண்டு, வரும் நாளை இரவு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் குழுவினர் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலமாக புறப்பட்டு செல்கின்றனர். அவர்களின் வருகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை: போலீஸ், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுடன் நாளை சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...