×

நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகை குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மைசூர் பாஜ எம்பி, பரிந்துரையின் பேரில் பார்வையாளர் மாடத்திற்கு வந்த அந்த இளைஞர் திடீரென்று இருக்கைகள் மீது எகிறி குதித்து நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நாடாளுமன்றம் எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய தன்மையுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளதா என்பது குறித்து பாதுகாப்புத் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நாடாளுமன்றத்திற்குள் நான்கு கட்ட பாதுகாப்பு சோதனைகளைக் கடந்துதான் உள்ளே செல்ல முடியும். பாதுகாப்புப் படையினரின் மூன்று கட்ட சோதனைக்குப் பிறகே ஒருவர் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைய முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும். பார்வையாளர்கள் அரங்கில் நுழைவதற்கு எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் தேவை. நுழைவாயில் சோதனை, வரவேற்பறையில் புகைப்படம் எடுக்கப்படும். இவ்வளவு ஏற்பாடுகளையும் மீறி நாடாளுமன்றத்தில் நடந்துள்ள நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அலட்சியப் போக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

The post நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் அரசியல் தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi ,Dinakaran ,
× RELATED பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை...