×

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கை ஒப்புதல்: தமிழக அரசு விண்ணப்பம்

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் பெறுவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம், சென்னை நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள பரந்தூரில் ரூ.29,144 கோடி மதிப்பீட்டில் 2,172.73 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது பரந்தூர் விமான நிலையத்துக்கான நில எடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் குழு, பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஒன்றிய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதிக்கும், பாதுகாப்பு அனுமதிக்கும் விண்ணப்பித்தது.

தொடர்ந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இம்மாத தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து அனுமதியளித்தது. இந்நிலையில், தற்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய அரசிடம் டிட்கோ சமர்பித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கை ஒப்புதல்: தமிழக அரசு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Union government ,Paranthur ,Parantur ,
× RELATED பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க...