×

ஓ.பி.எஸ். மேல்முறையீடு வழக்கில் ஏதேனும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும்: உயர்நீதிமன்றம்!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஏப்ரல் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் மறுத்து தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு மார்ச் 28ல் அளித்த தீர்ப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டுமென்று கோரியிருந்தனர்.

இந்த மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கட்சியில் இருந்து நீக்கம் செய்த நடவடிக்கைகள் அனைத்து் விதிகளுக்கு எதிரானது. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொது செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டிருக்க முடியும் என்று வாதிட்டார். வைத்திலிங்கம் தரப்பிலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி மற்றும் அதன் தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது,”என்றார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஓ.பி.எஸ். மேல்முறையீடு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.ஏதேனும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையையும் நிராகரிக்கிறோம். அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்.20-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைக்கு இறுதி விசாரணை நடைபெறும்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

The post ஓ.பி.எஸ். மேல்முறையீடு வழக்கில் ஏதேனும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும்: உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,AIADMK ,Dinakaran ,
× RELATED வேளச்சேரியில் நிலம் பத்திரப்பதிவில்...