×

பலமின்றி கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலம்: மக்கள் உயிருடன் விளையாடுகிறதா ரயில்வே?

* ரூ550 கோடி செலவிட்டும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள்
* ஆணையர் சமர்ப்பித்த பகீர் அறிக்கை
* 5 பேர் குழு விசாரணை

இந்தியாவின் புண்ணிய தலங்களுள் காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரம் விளங்குகிறது. இங்கு புனித யாத்திரையாகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், தமிழகம் மட்டுமின்றி வட, தென்மாநிலங்களில் இருந்து வந்தவண்ணம் உள்ளனர். இதை கருத்தில்கொண்டு மண்டபத்தையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் ரயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, 1902ல் கட்டுமான பணி தொடங்கியது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பணி ஒரு வழியாக உறுதியான 144 தூண்களுடன் 1913ல் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து 1914, பிப்.24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. மொத்தம் 2.30 கிமீ தூரத்தில் அமைக்கப்பட்ட இப்பாலமே இந்தியாவின் முதல் ரயில் பாலமாகும். கடந்த 2014ல் நூற்றாண்டு விழா கண்டது வரை இதன் உறுதித்தன்மையில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.

ரூ550 கோடியில் புதிய பாலம்
கடந்த 2022, டிசம்பர் 23ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது, அதிர்வுகள் அதிகம் இருந்தது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாம்பன் பழைய தூக்குப்பாலம் வழியாக ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தாலும், நூற்றாண்டை கடந்த பாலம் என்பதால், இதனை தவிர்த்து புதிய பாலம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. இதன்படி பழைய தூக்குப்பாலம், செயல்பாட்டில் இருந்த காலத்திலேயே புதிய ரயில் பால கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. இதற்காக ரூ550 கோடி செலவில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்க முடிவானது. இதில் சர்வதேச தரத்துடன் செங்குத்து தூக்குப்பாலத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

அதிர்ச்சி ரிப்போர்ட்
இதன்படி கட்டுமான பணிகள் கடந்த 2020 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரோனா காலம் மற்றும் இயற்கை பேரிடர் உட்பட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக சுமார் 4 ஆண்டுகளாக நடந்து வந்தன. இதன்படி ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் பொறியாளர்கள் குழுவினர் இந்த பாலத்தின் முழுமையான கட்டுமான பணிகளை கடந்த அக்டோபரில் முடித்து பல்வேறு கட்ட ஆய்வு, ரயில் சோதனை ஓட்டங்களை நடத்தி ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். புதிய பாம்பன் ரயில் பாலத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் மண்டபம் முதல் பாம்பன் வரை சென்று ஆய்வு செய்தார்.

அவர் 99 ஸ்பான்கள், 2 கர்டர்ஸ், தூக்குப்பாலம், ஒற்றை அகல ரயில்பாதைகளை ஆய்வு மேற்கொண்டார். செங்குத்து தூக்குப்பாலமும் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. இதன் ஆய்வறிக்கை கடந்த 26ம் தேதி வெளியானது. ஆணையர் சவுத்ரி அறிக்கைதான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் ராமேஸ்வரம் வருவதற்கு ரயிலில் பயணிக்கும் மிக முக்கியமான பாம்பன் புதிய ரயில் பாலத்தில் எண்ணற்ற குறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆலோசனை குழு தவிர்ப்பு
பாலத்தை தாங்கி நிற்கும் லிப்ட் ஸ்பான் கர்டர், வடிவமைப்பில் ரயில்வே வாரியத்தின் கீழான ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின்(ஆர்டிஎஸ்ஓ) உரிய ஆலோசனை பெறாமல், சர்வதேச தரத்தில் அமைப்பதாக கூறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆலோசனையின்படியே ரயில்வே பாலம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற பாலங்களை திட்டமிடுவதற்கு ஒரு தொழில்நுட்ப ஆலோசனை குழு உருவாக்கப்பட வேண்டும். அதற்கென்று சில நடைமுறைகள் உள்ளன. ஆனால், ஆர்டிஎஸ்ஓவை திட்டத்தில் இருந்து விலக்கி, ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்பேரிலேயே அமைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. லிப்ட் ஸ்பான் கர்டரை தவிர, தட்டு கர்டர்களும் ஆர்டிஎஸ்ஓ ஆலோசனை அல்லாத வடிவமைப்பை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. இதற்கும் ஆர்டிஎஸ்ஓ தேவை என்று 18.10.2024 அன்று ஆணையம் சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெல்டிங் திறன் குறைவு
முற்றிலும் இரும்பு கர்டர்கள், தளவாட பொருட்களை கொண்டு கட்டப்படும் இதுபோன்ற கட்டுமானங்களில், வெல்டிங் பங்கு மிகவும் முக்கியமானது. உயர்தரத்துடன் வெல்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதிலும் நிபந்தனைகளை மீறி வெல்டிங் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாலத்தின் அழுத்தத்தை சுமக்கும் திறன் 36 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கடலில் அமைக்கப்படும் இரும்பு பாலங்களில் துருப்பிடித்தல் முக்கிய பங்கு வகிக்கும். இதற்காக உயர்தரமான வண்ணங்கள் பூசப்பட்டு துருப்பிடிக்காமல் தடுக்கப்படும். இதுவே, நீண்ட காலம் பாலம் உழைப்பதற்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இப்பாலமானது கடல் அரிப்பால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

கடல் அரிப்பு பிரச்னைக்கு தீர்வு காண போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலத்தின் சில இடங்கள் ஏற்கனவே துருப்பிடிக்கத் தொடங்கி விட்டன. கடந்த 11.7.2024ல் நடந்த ஆய்வுகளில் இது பெரிதுபடுத்தப்பட்டது. ஆனாலும் இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. மேலும், பெண்டர் பைல்ஸ் எந்த வடிவமைப்பும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. நடைமுறைகளை பின்பற்றாமல் சுயமாக முடிவெடுத்து ரயில்வே விதிகளை மீறியுள்ளது. மேலும், தாங்கு உருளைகளில் வழங்கப்படும் நீரூற்றுகள் அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்டவை அல்ல. இந்த நீரூற்றுகளின் அரிப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

பாதையும் படுமோசம்
ரயில் இயக்க சோதனையின் போது, பாதையின் சீரமைப்பு சரியாக இல்லை என்பது கவனிக்கப்பட்டது. இந்த குறைபாடுகளை களைய முழு பாதையையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். அவற்றை சரி செய்ய வேண்டும். இந்த குறைபாடுகளை கவனிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக மதுரை கோட்ட மேலாளர் சான்றளித்த பின்னரே ரயில் சேவை அனுமதிக்கப்பட வேண்டும். பாம்பன், மண்டபம், ரயில் நிலையங்கள், புதிய பாலத்தின் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ரயில் சேவை தொடங்கும் முன்பு, பணி விதிகள் பற்றிய புரிதல் குறித்து சில விதிமுறைகளை தெரிந்திருக்க வேண்டும்.

அதற்கான உறுதிமொழியையும் பெறவேண்டும். ஆனால், பாம்பன் பால கட்டுப்பாட்டு அறையில் புதிதாக வழங்கப்பட்ட இன்டர்லாக் சர்க்யூட்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். ரயில் சேவையை தொடங்குவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரியால், முறையாக அங்கீகரிக்கப்பட்ட வயரிங் வரைப்படங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாற்றங்கள் அவசியம்
தற்போதைய நிலவரப்படி, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 50 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கலாம். அதற்கு முன் பாலத்தில் வெல்டிங் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும்விதமாக சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதை செய்து முடித்த பின் ரயில்களை இயக்கலாம். அதேபோல, பாம்பன் கடல் பகுதியில் 58 கிமீ வேகத்தில் காற்று வீசினால் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் செங்குத்து தூக்குப்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வு அறிக்கைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளும் அதற்கான ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு ஆணையர் கூறிய நிறைய விஷயங்கள், ஏன் ரயில்வே அமைச்சகத்தால் கவனிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும், மிக முக்கியமான பாம்பன் புதிய ரயில் பாலம், இவ்வளவு கட்டுமான குறைபாடுகளுடன் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறுஆய்வு நடத்த வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால், பாம்பன் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வருமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

5 பேர் குழு விசாரணை
புதிய பாம்பன் பால சர்ச்சை குறித்து விசாரணை நடத்த ஐஐடி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேரைக் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இக்குழுவினர் உடனடியாக விசாரித்து அறிக்கையளிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

முறைகேடு இருந்தால் நடவடிக்கை கட்டாயம் – பயணியர் சங்கம் கோரிக்கை
ரயில் பயணியர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘பாம்பன் புதிய பாலத்தில் பல குறைபாடுகள் உள்ளது என ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே, இதற்காக தனியாக பொறியாளர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். பாலம் கட்டியதில் முறைகேடுகள் இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ரயில்வே நிர்வாகத்திற்கு எம்பிக்கள் கண்டனம்- ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்
மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான ரயில்வே வாரியம், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க வழித்தடமான பாம்பன் பாலத்தின் பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பாம்பன் பாலம் கடல் நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்ட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பம். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை நாட்டு மக்களுக்கு அமைச்சர் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதிய கடிதத்தில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் பாதுகாப்பு குறைபாடு பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பித்து இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை உறுதி செய்த பின்னரே பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பாலத்தின் தரத்தை மறு ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்ஜினியர்கள் கூறுவது என்ன?
பொறியாளர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘புதிய பாம்பன் பாலத்தில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம். பல வருடம் தண்ணீரில் தாங்கி நிற்கக்கூடிய வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பால வேலைகளில் எந்த குறைபாடுகளும் இல்லை. அரிப்பு தன்மையில் குறைபாடுகள் உள்ளது என ஆர்டிஎஸ்ஓ குழுவினர் கூறியுள்ளனர். இது சரி செய்யப்பட்டு வருகிறது. ரயில் தண்டவாளத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சிறு சிறு வேலைகளை முடித்து முழுமை அடைந்த பின்னரே ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

புதிய பால வடிவமைப்பு ஐஐடியால் சரிபார்ப்பு- தெற்கு ரயில்வே விளக்கம்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய பாம்பன் பாலம் 2.05 கிமீ நீளமுள்ளதாகும். நாட்டிலேயே தனித்துவமான 72 மீ செங்குத்து லிப்ட் ஸ்பான் முறையை கொண்டது. இந்த எக்கு பாலத்தின் வடிவமைப்பானது, டைப்சா சர்வதேச ஆலோசகர் மூலம் செய்யப்பட்டு, ஐரோப்பிய மற்றும் இந்திய குறியீடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பு, சென்னை ஐஐடியால் சரிபார்க்கப்பட்டது. ரயில்வே மற்றும் ஆர்டிஎஸ்ஓ மூலம் வடிவமைப்பை ஆய்வு செய்ததில் தொழில்நுட்ப வரம்புகளுக்கு உட்பட்டதாகவே ரயில்வே வாரியம் கருதுகிறது. மும்பை ஐஐடியும் ஆய்வு செய்தது. இருமுறை சான்று சரிபார்த்த பிறகு, பாலத்தின் வடிவமைப்பு தெற்கு ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டது.

எனவே, நாட்டின் 2 முன்னணி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் முறையான ஆதாரத்தின் அடிப்படையில்தான் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. வெல்டிங் பணியானது 100 சதவீதம் திருச்சி வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மூலம் சரி பார்க்கப்பட்டது. இதனை தெற்கு ரயில்வேயும் சோதனை செய்தது. கடல் அரிப்பில் இருந்து பாலத்தை பாதுகாப்பதற்காக, 35 வருட ஆயுட்காலம் கொண்ட பாலிசிலோக்சேன் பெயின்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post பலமின்றி கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலம்: மக்கள் உயிருடன் விளையாடுகிறதா ரயில்வே? appeared first on Dinakaran.

Tags : Pompon ,Bakir ,Rameshwaram ,Kashi ,India ,Dinakaran ,
× RELATED சீவநல்லூர் அரசு பள்ளிக்கு ஒலி பெருக்கி வழங்கல்