திருப்பூர்: பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் அருகில் பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பெத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமர். அவிநாசியில் நிறுவனம் ஒன்றில் டெக்னீசியனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சைலா. மகன் சாய்சரண், 6 மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசிக்கிறார். சிறுவன் சாய்சரண் அதே பகுதியில் உள்ள ராஜா மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறைகள் எல்லாம் முடிந்து நேற்று மீண்டும் பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு பள்ளி வாகனத்திலேயே வீட்டிற்கு வந்துள்ளான். வீட்டின் அருகே பள்ளி வாகனத்தில் வந்து இறங்கிய சிறுவன் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்ற போது, பள்ளி வாகனத்தை ஓடிவந்த ஓட்டுனர் மணி சிறுவன் சாலையில் செல்வதை கவனிக்காமல் வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் பள்ளி வாகனத்தில் பின்பக்க சக்கரத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். இது தெரியாமல் ஓட்டுனர் மணி வாகனத்தை இயக்கியதால் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஓட்டுநர் மணியை இன்று காலை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகம் எந்தவித ஆறுதலும் தெரிவிக்காததை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருப்பூர் – பொங்கலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பல்லடம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதி வேகத்தில் செல்வதாகவும், பள்ளி வாகனங்கள் சரியான நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகத்தை எதிர்த்தும் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசார் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும் என்றும், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உறுதியளித்த பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
The post பல்லடம் அருகே தனியார் பள்ளி மாணவன் நேற்று வாகனம் மோதி பலி: பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.