×

இறைவனை வழிபடுவது தனிமனித உரிமை.. பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபட கட்டுப்பாடு கூடாது: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சீமான் வேண்டுகோள்!!

சென்னை: பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபட உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த கட்டுப்பாட்டுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில்; தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து அல்லாத மக்களுக்கு அனுமதி மறுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. மாற்று மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் தமக்கு விருப்பமான இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு எனும் நிலையில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.

இந்து கடவுள் இல்லை: முருகனை இந்து கடவுள் என்று யார் தீர்மானித்தது? இந்து என்ற வார்த்தையே இல்லாத சங்க இலக்கியங்களிலேயே முருக வழிபாடு பற்றிய செய்தியுள்ளது. பிரித்தானியர்களால் இந்தியா என்ற ஒரு நாடு ஒருங்கிணைக்கப்பட்டு, இந்து என்று ஒரு மதம் உருவாக்கப்படுதற்கு முன்பே முருக வழிபாடு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்து இருந்து வருகிறது. எனவே, முருகனை இந்து கடவுள் என்பதும், இந்துக்கள் மட்டுமே முருகனை வழிபட வேண்டும் என்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர் முப்பாட்டன் முருக வழிபாடு என்பது சிறந்து விளங்குகிறது. இசுலாமியர் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவின் பத்து மலை முருகனை சீனர்கள் அதிகம் வழிபடுகின்றனர்? நம் இறைவனை அனைவரும் வழிபடுவது என்பது பெருமைதானே ஒழியே, இழிவல்ல!

சைவ சமயம்: தமிழர்களின் தனிப்பெரும் சமயமாம் சைவ சமயத்தில், இறைவன் சிவன் மீது பக்திகொண்டு வழிபட்ட பௌத்த மதத்தைச் சார்ந்த சாக்கிய நாயன்மாரையும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்களான 63 நாயன்மார்களில் ஒருவராக அங்கீகரித்து, ஒவ்வொரு சிவன் கோயிலுக்குள்ளும் அவரது சிலையை வைத்து வழிபடும் மண் தமிழர் மண். அப்படிப்பட்ட பரந்துபட்ட மனித மாண்பினை உடைய தமிழர் மெய்யியல் மரபினை சிதைப்பதென்பது எவ்வகையில் நீதியாகும்? தமக்கு விருப்பமான இறைவனை வழிபடுவது என்பது தனிமனித அடிப்படை உரிமையாகும். அதனை மறுப்பதென்பது பெருங்கொடுமையாகும்.

குடிக்க மட்டும் சாதி- மதம் இல்லையா?: படிக்கப் போகும் பள்ளிக்கூடத்தில் சாதி, மதம் பார்ப்பது, கும்பிட போகும் கோயிலுக்குள் சாதி, மதம் பார்த்து ஒதுக்கி வைப்பதென்பது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். எல்லாவற்றிலும் சாதி, மதம் பார்க்கும் பெருந்தகைகள் குடிக்கப்போகும் மதுக்கடைகளில் மட்டும் சாதி-மதம் உள்ளிட்ட எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லையே ஏன்? மாற்று மதத்தினர் இந்துவாக மதம் மாறினால் ஏற்றுக்கொள்ள கூடியவர்கள், மாற்று மதத்தினர் தங்கள் இறைவனை வணங்க மட்டும் அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்?

நம்பிக்கை உடையவர்கள் மட்டும்தான் வழிபட அனுமதி என்றால் ஒருவர் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பதை எந்த அளவுகோல் மூலம் சட்டம் அளவிடப்போகிறது? உறுதிமொழி அளித்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்றால் உறுதிமொழியின் உண்மைத்தன்மையை யார் உறுதி செய்வது? மாற்று மதத்தைச் சேர்ந்தவர் அறநிலையத்துறை அதிகாரி என்றால் அவரை கோயிலுக்குள் அனுமதிப்பீர்களா? மாட்டீர்களா? இத்தனை ஆண்டுகாலமாக மாற்று மதத்தினர் பழனி முருகனை வழிபட்டதால் இந்தச் சமூகத்தில் ஏற்பட்ட சாதி-மத கலவரம் என்ன? சட்டம்-ஒழுங்கு சிக்கல் என்ன? திடிரென்று இப்போது தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?

மதநல்லிணக்க மண்: தமிழ்நாட்டில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், சிக்கல் சிங்காரவேலன் கோயில் என்று அனைத்து மதத்தினரும், அனைத்து மத கோயில்களுக்கும் சென்று வழிபடக்கூடிய மரபணுவிலேயே மதநல்லிணக்கம் நிலைத்திருக்கும் தமிழ் மண்ணில், மனதிற்கு நெருக்கமான ஆண்டவனை வழிபட மனிதன் உருவாக்கியச் சட்டங்களால் தடை ஏற்படுத்துவது என்பது பிரிவினைக்கு வழிவகுத்து, மக்கள் மனங்களில் உள்ள மதப் பாகுபாடுகளை அதிகரிக்குமேயன்றி ஒருபோதும் குறைக்கப்போவதில்லை. அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? மாண்பமை உயர்நீதிமன்றமே இதற்கு வழியேற்படுத்துவதுதான் வேதனையின் உச்சமாகும்.

இந்து மதத்துக்குதான் இழுக்கு: மலர்கள் வெவ்வேறாக இருக்கலாம். அதன் மணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். அதன் நிறங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைத்து மலர்களிலும் உள்ள தேனின் சுவை என்பது ஒன்றுதான் என்பதுபோல்தான் நாம் வணங்கும் இறைவனும்; அப்படி இறைவனை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வழிகளில் வழிபட அனுமதிப்பதுதான் இந்து மதத்தின் பெருமை என்று கூறிவிட்டு, தற்போது இறைவனை இப்படி வழிபடுபவர்களுக்கு மட்டும்தான் வணங்க அனுமதி என்பது இத்தனை ஆண்டுகாலம் கூறிவந்த பெருமைக்கு இழுக்கினையே ஏற்படுத்தும். ஆகவே, மக்கள் மனதில் மத வெறுப்பினை விதைக்க வழிவகுக்கும், பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதிக்கும் மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

 

The post இறைவனை வழிபடுவது தனிமனித உரிமை.. பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபட கட்டுப்பாடு கூடாது: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சீமான் வேண்டுகோள்!! appeared first on Dinakaran.

Tags : God ,Palani Murugan Temple ,Tamil Nadu Govt ,Seeman ,CHENNAI ,Madurai High Court ,Naam Tamilar Party ,Tamilnadu government ,ICourt ,Madurai ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து