×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வெளியிட்ட அறிக்கை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடத்தினார். வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலித்த முதலமைச்சர், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்ததால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது.

அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள‌ பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நேற்று நடைபெற்ற முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin Government ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...