×

ஊட்டி‌யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கால்வாயில் வீசிய வணிக வளாகத்துக்கு அபராதம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி

ஊட்டி: ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கால்வாயில் வீசிய வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி சார்பில் ஊட்டி நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் ஊட்டி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். ஊட்டி நகர பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளதால் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும், மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள், சிஎப்எல் பல்ப்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாகவும் பிரித்து வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பெரும்பாலனோர் குப்பைகளை முறையாக பிரித்து வழங்குவதில்லை. மேலும் பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த பஸ்களில் வரும் பயணிகள் பயன்படுத்தும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களை முறையாக அப்புறப்படுத்தாமல் அவற்றை அருகே உள்ள கோடப்பமந்து கால்வாய்க்குள் வீசி எறிவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று காலை சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.

இதில், கோடப்பமந்து கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை வீசி எறிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அந்த வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இனி இது போன்ற தவறுகள் நடக்காது என வணிக வளாக நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post ஊட்டி‌யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கால்வாயில் வீசிய வணிக வளாகத்துக்கு அபராதம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty.… ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் 500...