×

ஊட்டியில் பகல் நேரங்களில் வாட்டும் வெயில்

*நுங்கு விற்பனை அமோகம்

ஊட்டி : ஊட்டியில் தற்போது பகல் நேரங்களில் வெயில் அதிகரித்துள்ள நிலையில் குளிர்ச்சி தரும் நுங்கு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதன் பின் இரு மாதங்கள் மழை குறைந்து காணப்படும். மீண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்கி சுமார் ஒரு மாத காலம் பெய்யும்.

இம்முறை தென்மேற்கு பருவ மழை குறித்த நேரத்தில் துவங்கவில்லை. மேலும் போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு மிகவும் குறைந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் துவங்கி தேவையான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவமழை துவங்கவில்லை. எனினும் அவ்வப்போது இரவு நேரங்களில் மட்டும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதே சமயம் பகல் நேரங்களில் மழையின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. சில சமயங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், சமவெளி பகுதிகளில் இருந்து நுங்கு, கம்மங்கூழ் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை சிறு வியாபாரிகள் துவக்கி உள்ளனர். தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து சிலர் நுங்கு எடுத்து வந்து ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.

The post ஊட்டியில் பகல் நேரங்களில் வாட்டும் வெயில் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED விபத்தில் கால்கள் உடைந்த நிலையில்...