×

ஆன்லைன் வேலை என கூறி பெண்ணிடம் ரூ.7.61 லட்சம் நூதன மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோவை: கோவையில் ஆன்லைன் வேலை என கூறி பெண்ணிடம் ரூ.7.61 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் ஸ்ரீமுருகன் மனைவி பிரியாலட்சுமி (30). சமீபத்தில் இவரது செல்போனுக்கு டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதன் லிங்க்-ஐ கிளிக் செய்து பிரியாலட்சுமி, தனது விவரங்களை பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டு, டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆலோசகராக வேலைவாய்ப்பு உள்ளது எனவும், கம்பெனி இணையதள முகவரியில் ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்து கொடுத்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதை நம்பிய பிரியாலட்சுமி, ஆன்லைன் மூலம் அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார். அதற்காக அவர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். அவருக்கு கமிஷன் தொகையாக ரூ.13,407 கிடைத்தது. மற்றொரு பணியை முடித்ததற்காக அவருக்கு மீண்டும் ரூ.11,706 கிடைத்தது. தொடர்ந்து பிரியாலட்சுமியை தொடர்பு கொண்ட நபர், நீங்கள் அதிகமாக முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.

இதை நம்பிய, பிரியாலட்சுமி சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7,61,916 அனுப்பினார். ஆனால், அதன் பின்னர் ,கமிஷன் தொகை கிடைக்கவில்லை. மொத்தமாக ரூ.7,61,916 சுருட்டி விட்டனர். அதிர்ச்சியடைந்த பிரியாலட்சுமி, அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து பிரியாலட்சுமி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆன்லைன் வேலை என கூறி பெண்ணிடம் ரூ.7.61 லட்சம் நூதன மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்