ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உத்திர காவிரி ஆற்றின் துணை ஆறாக கருதப்படும் பேய் ஆறு செல்கிறது. அதேபோல், பின்னத்துரை தொடங்கி கீழ்கொத்தூர், வரதலம்பட்டு, ஓங்கபாடி வழியாக ஏராளமான கிராமங்களை கடந்து இந்த ஆறு பள்ளிகொண்டா ஏரியில் கலக்கிறது.

இதற்கு நடுவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆங்காங்கே மண் தரை பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஓங்கபாடி பேய் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, ஓங்கபாடியில் இருந்து சென்றாயன்கொட்டாய் கிராமத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மண் தரை பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், அப்பகுதி மக்கள் 2,3 கிலோ மீட்டர் சுற்றி கொண்டு தான் மற்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர்.. இது தொடர்பாக ஒன்றிய கவுன்சிலர் குமாரிடம் தற்காலிகமாக மண் தரை பாலத்தை சீரமைக்கும்படியும், நிரந்தரமாக தரை பாலம் அமைத்து தரும்படியும் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்படி, ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் நேற்று ஜேசிபி மூலம் சீரமைக்கப்பட்டது. மேலும், தரை பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

The post ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: