×
Saravana Stores

ஒடிசா கோர விபத்து எதிரொலியால் ரயில்வே வாரியம் அதிரடி நாடு முழுவதும் ரயில் நிலைய ‘சிக்னல்’கள் தணிக்கை: 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஜிஎம்-களுக்கு உத்தரவு

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்து எதிரொலியால் நாடு முழுவதும் ரயில் நிலைய சிக்னல்களை தணிக்கை செய்ய ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு பக்கம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், மறுபக்கம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் விசாரணையை தொடங்கியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரின் சடலங்கள் பாலசோர் உள்ளிட்ட நகர மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகளில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 170 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் சடலங்கள் ஓரிரு நாளில் அடையாளம் காணப்படும் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த 1,200க்கும் மேற்பட்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக நேற்று விபத்து நடந்த பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேசன் வழியாக மீண்டும் ஓடத் தொடங்கியுள்ளன.

தண்டவாளப்பணிகள் துரிதகதியில் சீரமைக்கப்பட்டதால், நேற்று வந்தே பாரத், கோரமண்டல் போன்ற ரயில்களும் இயக்கப்பட்டன. இந்த ரயில் பாதை வழியாக இயங்கும் ரயில்களில் 80 சதவீத ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த இரண்டாவது டவுன் டிராக்கில், 70 சதவீதம் வரை ரயில்கள் செல்லத் தொடங்கின. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடிந்ததால், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் 9 குழுக்குள் அவர்களது முகாமிற்கு திரும்பி சென்றன.

அதேநேரம் நேற்று இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் விபத்தில் காயமடைந்து புவனேஸ்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகோ பைலட்கள் (ஓட்டுநர்) மற்றும் அவர்களது உதவியாளர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், அவர்கள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் ரயில்வே சிக்னல் அமைப்பை தணிக்கை செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வரும் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி ஜூன் 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து பொது மேலாளர்களுக்கும் (ஜிஎம்) ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அவசர கடிதத்தில், ‘ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் கருவிகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை தணிக்கை செய்ய வேண்டும். சிக்னல்களை கட்டுப்படுத்தும் ‘ரிலே’ அறையை சரிபார்க்க வேண்டும். இரட்டை சிக்னல் சரியாக வேலை செய்கிறதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

நாடு முழுவதும் சிக்னல்கள் சரியாக வேலை செய்கிறதா? என்ற சோதனை முடிந்ததும், சுமார் 10 சதவீத இடங்களில் சிக்னல் சிஸ்டம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை மூத்த அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்துவார்கள். எனவே சிக்னல்கள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை தணிக்கை செய்து வரும் 14ம் தேதிக்குள் அனைத்து பொது மேலாளர்களும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா கோர விபத்து எதிரொலியால் ரயில்வே வாரியம் அதிரடி நாடு முழுவதும் ரயில் நிலைய ‘சிக்னல்’கள் தணிக்கை: 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஜிஎம்-களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Odisha ,New Delhi ,Railway Board ,Station ,Dinakaran ,
× RELATED பாதுகாப்புக்கு ஆபத்து ரயில்...