அகர்தலா: சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜ சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரிபுரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிபுராவில் மாணிக் சாஹா தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது பாஜவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜடாப் லால் நாத் தன் செல்போனில் ஆபாச விடியோ பார்த்து கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து ஜடாப் லால் நாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் திரிபுரா சட்டப்பேரவையின் கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது ஜடாப் லால் நாத் விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சியினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் பிஸ்வாபந்துவை கண்டித்து எதிர்க்கட்சியினர் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்ஜெட் நடவடிக்கைகளின்போது கூச்சலிட்டு, அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நயன் சர்க்கார், காங்கிரஸ் கட்சியின் சுதிப் ராய் பர்மன், திப்ரா மோத்தா கட்சியை சேர்ந்த ப்ரிஷகேது டெப்பர்மா, நந்திதா ரியாங் மற்றும் ரஞ்சித் டெப்பர்மா ஆகிய 5 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அவரது உத்தரவை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வௌிநடப்பு செய்தனர்.
The post ஆபாச படம் பார்த்த பாஜ எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி திரிபுரா சட்டப்பேரவையில் கடும் அமளி: எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.